Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கான்கிரீட் வீடு கட்ட மானியம் : மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின்

Print PDF

தினமலர் 03.03.2010

கான்கிரீட் வீடு கட்ட மானியம் : மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின்

மதுரை : "" குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்த இடம் இருந்தால் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்,"" என, மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் பேசினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் களஞ்சியம் அமைப்பின் சார்பில் மகளிர் விழா நடந்தது. இதில் அவர் பேசும்போது, ""பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற முயன்று கொண்டுஇருக்கின்றன. குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்த இடம் இருந்தால் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள 99 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்,'' என்றார்.

களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் அகிலாதேவி பேசும்போது, ""களஞ்சியம் அமைப்பில் 998 குழுக்களும், 15,000 உறுப்பினர்களும் உள்ளனர். ஆறு கோடி ரூபாய் சேமிப்பும், வங்கிக்கடனாக 35 கோடிரூபாயும் உள்ளது. ஒரு லட்சத்து 122 ரூபாய் சுய தொழில் தொடங்க வெளிக்கடனாக கொடுத்துள்ளோம். எதிர்காலத்தில் மாநகராட்சியுடன் இணைந்து,அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் குழுவினருக்கு கடன் வழங்க உள்ளோம்,'' என்றார்.களஞ்சிய இயக்க செயற்குழு உறுப்பினர் தாயம்மாள் வரவேற்றார். மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை சுகாதார அலுவலர் சுப்பிரமணியன், களஞ்சிய நிர்வாகி பத்மாவதி, தானம் அறக்கட்டளை இயக்குனர் வாசிமலை கலந்து கொண்டனர். குழு உறுப்பினர் கவுரி நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:45
 

புதிய மாமன்றத்துக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதி

Print PDF
தினமணி 26.02.2010

புதிய மாமன்றத்துக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதி

திருப்பூர், பிப்.25: திருப்பூர் மாநகராட்சி மன்றம் ரூ. ஒரு கோடியில் கட்டப்படும் என்று மேயர் க.செல்வராஜ் அறிவித்துள்ளார். திருப்பூர் நகரில் உள்ள குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.65 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியது:

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில் ரூ.ஒரு கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜே.பி.நகர், மூர்த்திநகர், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.2.73 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக பகிர்மான குடிநீர்க் குழாய்கள் அமைக்கவும், புதிய ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைக்கவும் ரூ.1.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1.8 கோடியில் தெருவிளக்குகள் அமைக்கப்படும். மின்மயானம் முதல் அணைக்காடு வரை நொய்யல் ஆற்றங்கரையில் ரூ.21 லட்சத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 180 குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வாங்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்படும். ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் கழிப்பறைகள் வாங்கப்படும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் சர்வதேசத் தரத்தில் கழிவறை கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் நகரில் குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிதியில் 20 சதவீதம் சிறப்புநிதியாக ஒதுக்கப்படும். இந்நிதியில் இருந்து குடிசைப்பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கப்படும்.

பல்லடம் சாலையில் மாநகராட்சி துப்புரவாளர் காலனி அருகே சிறுபாலம் அமைத்தல், கே.வி.ஆர்.நகர் குடிசை பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், சூசையாபுரம் மாநகராட்சி துப்புரவாளர் காலனியில் மறு தார்த்தளம் அமைத்தல், கே.வி.ஆர்.நகர் குடிசைப் பகுதியில் மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பூலாவரி சுகுமாரன் நகர் குடிசைப் பகுதியில் குடிநீர்க் குழாய் அமைத்தல், காங்கேயம்பாளையம் புதூர்-1 குடிசைப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர்த் தொட்டி கட்டுதல், அணைக்காடு பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுதல், எம்.எஸ்.நகர் பகுதியில் சுகாதார வளாகம் பராமரிப்புப் பணி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஸ்பைடர் பழனிசாமி நகரில் சிறு பாலம் மற்றும் கான்கிரீட் தளம் அமைத்தல், கொங்குநகர் குடிசைப் பகுதியில் குடிநீர்க் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க ரூ.25 கோடியில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்ய, தனியார் தொழில்நுட்ப வல்லுனர்களை அரசு நியமித்துள்ளது. அறிக்கை கிடைத்ததும் ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவற்றை சுத்தம் செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஈஸ்வரமூர்த்தி பூங்கா, நாராயணசாமி மனைப்பிரிவு பூங்கா, கல்லூரிச்சாலை பூங்கா, தாராபுரம் சாலை டி.எஸ்.கே. பூங்கா, பி.என்.சாலை குமரன் நினைவு பூங்கா, ராமேகவுண்டர் மனைப்பிரிவு பூங்கா ஆகியவை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும், என்றார்.

Last Updated on Friday, 26 February 2010 09:25
 

வீட்டு வசதி வாரியத்தில் குலுக்கல் முறையில் தேர்வு

Print PDF

தினமலர் 25.02.2010

வீட்டு வசதி வாரியத்தில் குலுக்கல் முறையில் தேர்வு

ஓசூர்: ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தில் எட்டு வீடுகளுக்கு 49 விண்ணப்பங்கள் குவிந்ததால், குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஓசூர் நகரின் முக்கிய பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பாகலூர் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பகுதி- 6ல் எட்டு உயர் வருவாய் பிரிவு தனி வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. இதில், எட்டு வீடுகளை பெறுவதற்கு 49 பேர் விண்ணப்பித்தனர்.

ஓசூர் வீட்டு வசதிவாரியம் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பகுதி-6ல் உள்ள ஒரு உயர் வருவாய் பிரிவு வீட்டுக்கும் 36 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. விலை அதிகமாக இருந்தாலும், வீடுகளை பெறுவதில் பயனாளிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியதால் வீட்டுவசதிவாரியத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

இதே போல், பாகலூர் ஹவுசிங் ஃபோர்டு பகுதி-7ல் உள்ள பிருந்தாவன் நகரில் நான்கு உயர் வருவாய் தனி வீடுகள், ஒன்பது மத்திய வருவாய் பிரிவு தனி வீடுகள், மூன்று குறைந்த வருவாய் பிரிவு தனி வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. உயர் வருவாய் பிரிவு வீடுகளுக்கு 24 லட்ச ரூபாயும், மத்திய வருவாய் பிரிவு வீடுகளுக்கு 15 லட்ச ரூபாயும், குறைந்த வருவாய் பிரிவு வீடுகளுக்கு 7 லட்ச ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நான்கு உயர் வருவாய் பிரிவு வீடுகளுக்கு இரண்டு பேரும், ஒன்பது மத்திய வருவாய் பிரிவு வீடுகளுக்கு ஏழு பேரும், மூன்று குறைந்த வருவாய் பிரிவு வீடுகளுக்கு நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்தனர். இதனால், குலுக்கல் முறையை தவிர்த்து, வீடுகள் வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் செயற்பொறியாளர் மனோகரன் கூறியதாவது: ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தை பொறுத்தவரையில் கட்டப்படும் வீடுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு வருகிறது. நகரின் எந்த இடத்தில் வீடுகள் போட்டாலும் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தனியாரை விட நல்ல காற்றோட்டமான இடம், பூங்கா, வணிக வளாகம் மற்றும் நல்ல குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதால், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. தற்போது பகுதி-7 பிருந்தாவன் நகர் மற்றும் பகுதி-6 பாகலூர் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட இடங்களில் தனி குடியிருப்பு வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார

Last Updated on Thursday, 25 February 2010 06:40
 


Page 46 of 69