Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் உதவி

Print PDF

தினமலர் 25.01.2010

நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் உதவி

தர்மபுரி: சொந்தவீடு கட்ட வட்டி ஊக்க உதவியுடன் நகரம், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஆக்கபூர்வ திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வட்டி ஊக்குதவியுடன் கூடிய வீட்டுவசதி கடன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் நகரம், டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனக்கென்று சொந்தவீடு கட்டுவதற்கு தேவையான வட்டி ஊக்குதவியுடன் கூடிய வீட்டு வசதிக்கடன் தேசியமயமாக்கப்பட் வங்கிகளின் மூலம் கொடுக்கும் திட்டம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் மாத வருமானம் 5000 ரூபாய்க்கு குறையாமலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் 5,001 முதல் 10,000 ரூபாய் வரையில் இருக்க வேண்டும். அந்தந்த பிரிவினருக்குகேற்ப பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 25 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு கட்ட ஒரு லட்ச ரூபாயும் குறைந்த வருவாய் பிரிவினர் 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு கட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரையில் கடன் பெற்று பயன்பெறலாம். கடனை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 15 முதல் 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நகர் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கடன் பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டரிடம் இத்திட்டத்தில் பட்டா நகல், ரேஷன் கார்டு நகல், வருமான சான்றிதழ் ஆகியவற்றின் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Last Updated on Monday, 25 January 2010 06:27
 

மேம்பாட்டு பணி: டவுன் பஞ்., இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 19.01.2010

மேம்பாட்டு பணி: டவுன் பஞ்., இயக்குனர் ஆய்வு

மோகனூர்: மோகனூரில் செயல்பட்டு வரும் கலவை உரப்பூங்கா, ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை, டவுன் பஞ்சாயத்து இயக்குனர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 2008ல் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண் திட்டம் துவக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி நகரில் உள்ள 15 வார்டுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்பட்டது. மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி அதை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டம் 2008ல் செயல்படுத்தப்பட்டது.

அந்த திட்டத்தில் 161 வீடுகளுக்கு தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் 1.50 கோடி ரூபாய் மானியம், தார் சாலை அமைத்தல், சமுதாயக்கூடம் கட்டுதல் உள்பட 3.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முடிக்கப்படாத வீடுகள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், இரண்டு லேயர் சல்லி போடப்பட்டு சாலைப்பணியும் பாதி முடிந்துள்ளது.

இந்நிலையில், டவுன் பஞ்சாயத்துகளின் இயக்குனர் ராஜேந்திரன் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இயற்கை உரப்பூங்காவை ஆய்வு செய்தார். "இயற்கை உரம் தயாரிக்கும் முறை, விற்பனை செய்யும் விதம், விவசாயிகளிடம் உள்ள வரவேற்பு, சந்தை படுத்துவது குறித்து' அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.

"வீடுகள் அனைத்தும் தரமானதாக உள்ளதாக, அரசு விதிப்படி முறையாக கட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார். கட்டப்படாத வீடுகளை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சேலம், நாமக்கல் மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஞானசேகரன், மாவட்ட உதவி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, செயல் அலுவலர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:35
 

அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத தமிழகம்: அமைச்சர் நேரு

Print PDF

தினமணி 13.01.2010

அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத தமிழகம்: அமைச்சர் நேரு

மணப்பாறை, ஜன. 12: ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தினால், தமிழகம் அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாறும் என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதியோர் உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்று, 767 பேருக்கு உதவித் தொகைகளை வழங்கி, அமைச்சர் மேலும் பேசியது:

இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஒருவருக்கு ரூ. 60,000 வீதம் 21 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 1,800 கோடி மதிப்பில் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கூரை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற நிலை உருவாகும். தற்போது, 500 பேர் உள்ள கிராமங்களுக்கும் இணைப்புச் சாலை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு, திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் அமைச்சர் நேரு.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்னுசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் செ. பன்னீர்செல்வம், கலைச்செல்வி நாகராசன், ராஜலட்சுமி வெங்கடேசன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.ஏ. ராமசாமி, நகரச் செயலர் கீதா ஆ. மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலர்கள் மொண்டிப்பட்டி எஸ். நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 09:29
 


Page 50 of 69