Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குறைந்த வட்டியில் வீட்டு கடன் பெற தேவர்சோலை பேரூராட்சி அழைப்பு

Print PDF

தினகரன்                02.11.2010

குறைந்த வட்டியில் வீட்டு கடன் பெற தேவர்சோலை பேரூராட்சி அழைப்பு

கூடலூர், நவ.2: தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பட்டா நில உரிமையாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கடன் பெற தேவர்சோலை பேரூராட்சியை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீட்டு வசதி திட்டம், இந்திரா ஆகாஷ் யோஜனா திட்டம், கச்சா வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நகராட்சி, பேரூராட்சி பகுதி ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி நகராட்சி, பேரூராட்சியில் வசிக்கும் ஏழை மக்கள் 250 சதுர அடியில் வீடு கட்ட ரூ.ஒரு லட்சமும், 400 சதுர அடியில் வீடு கட்ட ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் வட்டியில் மானியம் வழங்கும் கடனுதவி திட்டத்தை அரசு புதிதாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆதிவாசிகள், பழங்குடியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற முடியும். திட்டத்தில் பயன் பெற விரும்பும் நபர்கள் பேரூராட்சி, நகராட்சிகளில் விண்ணப்பம் பெற்று ரேஷன் கார்டு, தேர்தல் அடையாள அட்டை, பட்டா, வருவாய் சான்று ஆகிய நகல்களுடன் தங்கள் புகைப்படத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒவ்வொரு வாரமும் கோவையிலுள்ள வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளரிடம் ஒப்படைக்கப்படும். அங்கு அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து அந்தந்த பகுதி வங்கிகளுக்கு பரிந்துரை செய்வர். நீண்ட கால தவணையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கடன்களை குறைந்த மாத தொகையில் திருப்பி செலுத்தலாம்.

இதற்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்க இருப்பதால் பயனாளிகளுக்கு குறைந்த வட்டியில் வீட்டு கடன் கிடைக்கும். தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பட்டா நில உரிமையாளர்கள் தங்களுக்கு வீட்டுக்கடன் பெற தேவர்சோலை பேரூராட்சியை அணுகலாம் என்று செயல் அலுவலர் ராஜ கோபால், தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளனர்.

 

தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு : 472 வீடுகள் "ரெடி'

Print PDF

தினமலர் 22.10.2010

தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு : 472 வீடுகள் "ரெடி'

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றோர ஆக்ரமிப்பாளர்களுக்கு வசதியாக சுத்தமல்லி, திருமால்நகரில் 472 வீடுகள் தயார் நிலையில் உள்ளது.சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஆற்றங்கரையோரங்களில் உள்ள ஆட்சேபணைக்குரிய ஆக்ரமிப்புகளை அகற்றப்பட உள்ளது. அவ்வாறு அகற்றும் பட்சத்தில் அங்கு வசித்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் குடியிருப்புகள் அமைக்க மத்திய அரசு 12வது நிதிக் குழு மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்ரமிப்புகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளாக சுத்தமல்லியில் 199 லட்சம் சதுர அடி பரப்பில் 1.20 லட்சத்தில் 166 மனையுடன் கூடிய தனி வீடுகளும், திருமால்நகரில் 787 லட்சம் சதுர அடி பரப்பில் 2.57 லட்சத்தில் 306 அடுக்கு மாடி குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும், இத்திட்ட பகுதியில் சாலை வசதி, மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 13ம் தேதி குலுக்கல் முறையில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.மாற்று குடியிருப்புதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இன்ஜினியர் ராஜசேகர் தெரிவித்தார்.

 

புதிய வீடு கட்ட ரூ. 26 லட்சம் மானியம்

Print PDF

தினமணி 20.10.2010

புதிய வீடு கட்ட ரூ. 26 லட்சம் மானியம்

திருநெல்வேலி,அக்.19: திருநெல்வேலி மாநகர் பகுதியில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் 157 பேருக்கு ரூ. 26 லட்சம் மானியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேயர் அ.லெ. சுப்பிரமணியன் மானியத் தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் எஸ். விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தச்சநல்லூர் மண்டலத்தில் 58 பேர், பாளையங்கோட்டை மண்டலத்தில் 53 பேர், திருநெல்வேலி மண்டலத்தில் 40 பேர், மேலப்பாளையம் மண்டலத்தில் 6 பேர் என மொத்தம் 157 பேருக்கு ரூ. 26.39 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகளும், மாமன்ற உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்

 


Page 23 of 69