Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க மாநகராட்சியில் புதிய திட்டம்

Print PDF
தினகரன் 18.10.2010 3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க மாநகராட்சியில் புதிய திட்டம்

கோவை, அக்.18:கோவை மாநகராட்சியில் பழுதடைந்த 3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12,630 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. குடிசை பகுதியில் பட்டா உள்ள வீடுகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடிசைகள், பட்டா இல்லாமல் புறம்போக்கில் இருப்பதாகவும் தெரியவந்தது.

குடிசைப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இந்த வீடுகளுக்கு பட்டா இருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால், மாநகராட்சியில் குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குடிசைகளை பழுதுபார்க்க எவ்வித திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. குடிசைகளை கான்கிரீட் கட்டடமாக்க, குடிசைவாசிகள், 1.60 லட்ச ரூபாய் தொகை செலவிடவேண்டும். இதற் கான தொகை தங்களிடம் கிடையாது. மொத்த தொகையில் 85 சதவீத தொகை, 4 தவணைகளில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இருப்பினும் பயனாளிகள் கான்கிரீட் வீடு கட்ட அதிக ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், பழுதடைந்த வீடுகளை சீரமைக்க மநகராட்சி நிர்வாகம் உதவி செய்யவேண்டும் என குடிசைவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்தால், கோவை மாநகராட்சியில், 40 சதவீதம் குடிசைகள், தொடர்ந்து குடிசைகளாகவே இருக்கும். கான்கிரீட் வீடுகளாக மாறாது. குடிசைகளின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என மாநகராட்சி நிர்வாகம் கருதியது. இதைதொடர்ந்து குடிசைகளை சீரமைத்து, கான்கிரீட் மேற்கூரை அமைக்க தனி திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல் கட்டமாக, கோவை நகரில் 173 குடிசைப்பகுதியில், 3 ஆயிரம் குடிசைகளை சீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூரை, பில்லர், கட்டுமான சுவர்களை சீரமைக்க அனுமதி வழங்கப்படும். குடிசை மேம்பாட்டு திட்டத்தில் ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவையான அளவு தொகையை குடிசை சீரமைப்பிற்கு பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர, குடிசைகளில் கழிப்பிடம் கட்டும் திட்டமும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பராமரிப்பு, சீரமைப்பு பணிக்கு செலவிடப்படும் மொத்த தொகையில் பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்தினால் போதும். பட்டா உள்ள குடிசைகள் மட்டுமே இந்த திட்டம் பயன்பெறும். அடுத்த மாதத்திலிருந்து இந்த திட்டத்தை மாநகர் முழுவதும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய மனை, வீடுகளை விற்க கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் ஆய்வுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு

Print PDF

மாலை மலர் 14.10.2010

விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டு வசதி வாரிய மனை, வீடுகளை விற்க கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் ஆய்வுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு

சென்னை, அக்.14- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் மனைகள், வீடுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்குத் தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்றை அமைக்க கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் செயலாக்கப்படும் திட்டப்பணிகள் குறித்து புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், குடிசைமாற்று மற்றும் இடகட்டுப்பாட்டுத்துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதல்-அமைச்சரின் முதன்மைச் செயலாளர் (கண்காணிப்பு), நிதித்துறை முதன்மைச்செயலாளர், சென்னைப்பெருநகர வளர்ச்சிக் குழுமத் துணைத் தலைவர் - கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச்செயலாளர், நகர ஊரமைப்புத்துறை இயக்குநர், வீட்டுவசதி வாரியத்துறையின் மேலாண்மை இயக்குநர், வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு), தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின் போது, வளர்ந்து வரும் வீட்டு வசதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தித் தன் பொறுப்பில் வைத்துள்ள நிலங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களின் நடவடிக்கைகள் குறித்த விவரம், திட்டப்பணிகள், நில எடுப்புத்திட்டங்கள், குடியிருப்புகளுக்கும், மனைகளுக்கும் இறுதி விலை நிர்ணயம் செய்து விற்பனைப் பத்திரங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அவை தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புப்புனரமைப்புத்திட்டம் செயலாக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்து, அது தொடர்பாக விரைவு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார்.

சென்னைப் பெருநகரப் பகுதியில் செயலாக்கப்படும் அரசின் இரண்டாம் முழுமைத்திட்டம் - 2026-ன் செயலாக்கம், வளர்ச்சி, கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்த முதல்-அமைச்சர், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப இத்திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் சமுதாயப் பொறுப்புணர்வுடனும் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வளர்ந்துவரும் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு, சென்னைப் புறநகர் துரித ரெயில் திட்டம், வெளிவட்டச் சாலை, சரக்குந்து நிலையம் ஆகிய திட்டப் பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளைக் கேட்டறிந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துகளில் நிலவும் நெரிசலை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்னும் கடமை உணர்வோடு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி ஆளுமை மாற்றம், சிறப்பு வளர்ச்சி ஆளுமை மாற்றம் ஆகியவற்றின் செயலாக்க நிலையினை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி, இத்திட்டம் குறித்த விவரங்களை மக்களுக்கும், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான மேம்பாட்டாளர்களுக்கும் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். நகர ஊரமைப்புத் துறையில் செயலாக்கப்படும் பல்வேறு திட்டங்களின் செயலாக்க நிலை, மலைப்பகுதி பாதுகாப்புக் குழுமத்தின் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்த அவர், நீதியரசர் மோகன் குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் 1971-ல் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான, ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்புத் திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் குடியிருப்புகள் கட்டும் திட்டம், ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டம், விரைவு ரயில் போக்குவரத்து திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் அமைக்கும் திட்டம், ஆதிதிராவிடர்க்கான சிறப்பு நலத் திட்டம் ஆகிய திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி, இத்திட்டங்களை விரைவுபடுத்தி குறித்த காலத்தில் நிறைவேற்றி முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் மனைகள், வீடுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்குத் தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்றை அமைப்பதென்றும், அந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைத்திடக் கேட்டுக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களின் செயலாக்கம் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவின விவரம், செலவு செய்யப்பட வேண்டிய தொகையின் அளவு, ஆகியவற்றை ஆய்வு செய்து, இத்திட்டப்பணிகள் அனைத்தையும் தாமதமின்றி விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கருணாநிதி உத்தரவு

Print PDF

தினகரன் 14.10.2010

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி பணிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கருணாநிதி உத்தரவு

சென்னை, அக்.14: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர், குடிசைமாற்று துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின்போது, வளர்ந்துவரும் வீட்டுவசதி தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தி தன் பொறுப்பில் வைத்துள்ள நிலங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களின் நடவடிக்கைகள் குறித்த விவரம், திட்டப்பணிகள், நில எடுப்புத் திட்டங்கள், குடியிருப்புகளுக்கும், மனைகளுக்கும் இறுதி விலை நிர்ணயம் செய்து விற்பனைப் பத்திரங்கள் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புப் புனரமைப்புத் திட்டம் செயலாக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்து, அது தொடர்பாக விரைவு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னைப் பெருநகரப் பகுதியில் செயலாக்கப்படும் அரசின் இரண்டாம் முழுமைத்திட்டம் & 2026ன் செயலாக்கம், வளர்ச்சி, கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்த முதல்வர், பொதுமக்களின் கருத்துகளுக்கேற்ப இத்திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்துவதில் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வளர்ந்துவரும் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றும்பொருட்டு, சென்னைப் புறநகர் துரித ரயில் திட்டம், வெளிவட்ட சாலை, சரக்குந்து நிலையம் ஆகிய திட்டப் பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளைக் கேட்டறிந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துகளில் நிலவும் நெரிசலை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்னும் கடமை உணர்வோடு இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான, ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்பு திட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டம், ராஜீவ் காந்தி புனரமைப்புத் திட்டம், விரைவு ரயில் போக்குவரத்து திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் அமைக்கும் திட்டம், ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு நலத் திட்டம் ஆகிய திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை ஆகாமல் இருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் மனைகள், வீடுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்குத் தக்க பரிந்துரைகளை அளிப்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைப்பதென்றும், அந்தக் குழு ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க கேட்டுக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களின் செயலாக்கம் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவின விவரம், செலவு செய்யப்பட வேண்டிய தொகையின் அளவு, ஆகியவற்றை ஆய்வு செய்து, இத்திட்டப்பணிகள் அனைத்தையும் தாமதமின்றி விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

 


Page 24 of 69