Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ஒதுக்கீடு செய்யப்படாத 7 ஆயிரம் மனைகள்: குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 5.59 கோடி வருவாய் இழப்பு

Print PDF

தினமணி     25.05.2010

ஒதுக்கீடு செய்யப்படாத 7 ஆயிரம் மனைகள்: குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 5.59 கோடி வருவாய் இழப்பு

சென்னை, மே 24: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் உருவாக்கப்பட்ட 7 ஆயிரம் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இதன் மூலம் வாரியத்துக்கு ரூ 5.59 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

÷தமிழகத்தில் சாலையோரங்கள், ஆற்றோரங்களில் குடிசைகள் கட்டி தங்கி இருப்போருக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டியும், சில இடங்களில் அதற்கான மனைகளை வழங்கியும் அவர்களுக்கான இருப்பிடத் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

÷குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட இடங்களில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டித் தரும் பணிக்காக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

÷இதுவரை பல்வேறு இடங்களில் குடிசைப் பகுதிகளில் குடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் வீட்டுவசதிகள் கிடைத்துள்ளன. இருப்பினும், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்திய பலரும் தங்களுக்கான விóற்பனைப் பத்திரம் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

÷புதிதாக உருவாக்கப்படும் மனைகளுக்கு உரிய விலையை ஒதுக்கீடு செய்யும்போது இறுதி செய்யாமல், உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தவணைத் தொகைகளை வசூலிப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

÷இது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் மனைகளை உருவாக்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

÷இதில் சென்னையில் ஆற்றோரங்கள், சாலையோரங்களில் தங்கிவிட்ட மக்களுக்கு குடியிருப்புகளைக் கட்டுவதற்காக சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் -1 சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இதில் ரூ. 4 கோடி மதிப்பில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்-2-ல் ரூ. 20 கோடி மதிப்பில் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள், மனைகள் உருவாக்கப்பட்டன.

÷இதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் ரூ. 32 கோடியில், சுமார் 76 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் மனைகள் உருவாக்கப்பட்டன.

÷இவ்வாறு உருவாக்கப்பட்டதில் பெரும்பாலான மனைகள் அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன.

÷இந்த ஒதுக்கீடு செய்யும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எவ்விதக் காரணமும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டன. இதனால், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும், மனைகளும் உரிய நபர்களுக்குக் கிடைக்காமல் பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டன.

÷குடியிருப்புகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முறையாக நடைபெறாததால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

÷தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் மூலம் இத் தகவல் வெளியாகியுள்ளது.

÷இவ்வாறு, 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் வாரியத்துக்கு இதுவரை ரூ. 5.59 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மனைகளை உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருவாய் இழப்பை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தணிக்கைப் பிரிவினர் நிர்வாகப் பிரிவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

 

குடிசை பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகள் தரமானதாக இல்லை

Print PDF

தினகரன்     24.05.2010

குடிசை பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகள் தரமானதாக இல்லை

பெங்களூர், மே 24:குடிசைப்பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகளின் தரம் மலிவானதாக இருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநகரின் குடிமக்கள் தன்னார்வ தொண்டுநிறுவனம்(சிவிக்) என்ற அமைப்பு, ‘பெங்களூர் குடிசைப்பகுதியின் நிலைஎன்ற தலைப்பிலான ஆய்வில் ஈடுபட்டது. பெங்களூரில் உள்ள குடிசைப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிசைப்பகுதிகளில் அரசு கட்டித்தரும் வீடுகள் தரமற்றதாக இருப்பதாகவும், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் இல்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2009 ஜூன் முதல் 2010 பிப்ரவரி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜவகர்லால்நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டம், நகர ஏழைகளுக்கு அடிப்படை சேவைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டது. இந்த அறிக்கை பெங்களூர் மாநகராட்சி மேயர் எஸ்.கே.நடராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆய்வறிக்கையின் அடிப்படையில் குடிசைப்பகுதியை சேர்ந்தவர்களுடன் மேயர் எஸ்.கே.நடராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது சாமுண்டிநகர் சேரியை சேர்ந்த லட்சுமி கூறுகையில்,‘குடிசைகளை இடிக்கும்போது, மாற்று வீடுகள் வழங்க முடியாதப்பட்சத்தில், அது போன்ற திட்டங்களை ஏன் மேற்கொள்கிறீர்கள்? வேறு வீடுபார்த்து வசிக்கும் அளவுக்கு வசதியிருந்தால், நாங்கள் ஏன் குடிசைகளில் வசித்துவருகிறோம்?’ என்றார். இதற்கு பதிலளித்த மேயர் நடராஜ்,‘பாதிக்கப்பட்டுள்ள குடிசைவாசிகள் மற்றும் கவுன்சிலர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்.

புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்படும்வரை குடிசைவாசிகளை வேறு இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றார். தொண்டு நிறுவன ஆய்வில் தகவல் .

 

கோவையில் புதையும் கட்டடத்தை நிமிர்த்த முயற்சி : "ஜெட் கிரவுட்டிங்' பணி துவங்கியது

Print PDF

தினமலர்    24.05.2010

கோவையில் புதையும் கட்டடத்தை நிமிர்த்த முயற்சி : "ஜெட் கிரவுட்டிங்' பணி துவங்கியது

கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில் புதையும் கட்டடங்களை தடுக்கும், "ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்ப பணி துவங்கின.

கோவை அம்மன்குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. 15 ஏக்கர் பரப்பளவில் 16 பிளாக்குகள் கட்டப்படுகின்றன. 80 சதவீத கட்டுமானப் பணிகள் பூர்த்தியான நிலையில், அதில் ஒரு கட்டடம் மண்ணுக்குள் புதைய ஆரம்பித்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது அக்கட்டடம் முக்கால்வாசி இடிக்கப்பட்டு விட்டது. அதே கட்டடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதனால், இரு பிளாக்குகளையும் இணைக்கும் "எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' இரண்டாக பிளந்தது. இதையடுத்து, அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் சாந்தகுமார், சென்னை ஐ..டி. பேராசிரியர் காந்தி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் அருமைராஜ் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவினர், புதையும் கட்டடங்களின் மண்ணை பரிசோதித்தனர்.

இதில், கட்டடங்களின் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியில் இளகிய மண் இருப்பதே கட்டடம் புதைய காரணம் என கண்டறியப்பட்டது. அத்துடன், மேலும் ஐந்து கட்டடங்களும் புதைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. "கட்டடத்தின் அடியில் காணப்படும் இளகிய மண் இடைவெளிகளை உறுதிப்படுத்த "ஜெட் கிரவுட்டிங்' தொழில் நுட்பத்தை கையாளலாம்' என நிபுணர் குழுவினர் அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜெட் கிரவுட்டிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மொத்தம் நான்கு ஜெட் கிரவுட்டிங் கருவிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தண்ணீருடன் சிமென்ட் சேர்ந்த கலவையை கட்டடங்களின் அடியில் பீய்ச்சி அடிக்கும் இத்தொழில் நுட்பத்துக்கு தினமும் மூட்டை, மூட்டையாக சிமென்ட் செலவாகிறது. இத்துடன், கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களின் கீழ் தளங்களும் சிமென்ட் கான்கிரீட் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.

புதைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட கட்டடங்களின் கான்கிரீட் தூண்களின் ஓரங்கள் போர்வெல் மூலம் துளையிடப்படுகின்றன. அதன் வழியாக கட்டடத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் கலவை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இப்பணி நடக்கும்போது கலவை பாய்ச்சப்படும் அழுத்தம் கணக்கிடப்படுகிறது. அழுத்தம் குறைந்தால், மேலும் அதிக சிமென்ட் கலவை ஊற்றப்படுகிறது. அழுத்தம் அதிகமானால், கட்டடத்தின் அடியில் இளகிய மண் இல்லை என்பதை புரிந்து கொண்டு சிமென்ட் கலவை ஊற்றுவது நிறுத்தப்படுகிறது.

ஜெட் கிரவுட்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் ஒரு கட்டடத்துக்கு மட்டும் 40 மூட்டை சிமென்ட் செலவாகியுள்ளது கண்டு பொறியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தளவுக்கு கட்டடத்தின் அடியில் இளகிய மண் இடைவெளிகள் அதிகமாக இருந்துள்ளன.

பொறியாளர்கள் கூறுகையில்,"ஜெட் கிரவுட்டிங் பணிகள் முடிந்த கட்டடத்துக்கு எந்தவித ஆபத்தும் நேராது. கட்டடத்தின் அடியில் செலுத்தப்படும் சிமென்ட் கலவை, நாளடைவில் நன்கு இறுகி பாறை போல் "செட்' ஆகி விடும்,' என்றனர்.

 


Page 33 of 69