Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காமன்வெல்த் போட்டிக்கான மாநகராட்சி கட்டுமான பணி இம்மாதத்தில் முடியும்

Print PDF

தினகரன்    18.05.2010

காமன்வெல்த் போட்டிக்கான மாநகராட்சி கட்டுமான பணி இம்மாதத்தில் முடியும்

புதுடெல்லி, மே 18:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் அனைத்தும் இம்மாதத்துடன் முடிவடையும் என்று மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.

இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்காக சில கட்டுமான பணிகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை நிறைவேற்றுவதில் மாநகராட்சி விரைந்து செயல்பட்டு வருகிறது.

மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் இம்மாதத்துடன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை பணிகள் தாமதம் ஆனாலும் ஜூனுக்குள் அதை செய்து முடிப்போம்.

நகரை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கும் முன்னர் அத்தகைய நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நகரின் கவுரவம் மட்டும் அல்ல, நாட்டின் கவுரமே உயரும்.

திட்டப் பணிகளை நிறைவேற்ற மாநகராட்சியிடம் போதுமான நிதி இல்லை என்பது உண்மைதான். இதுபற்றி முதல்வர் ஷீலா தீட்சித்தை சந்தித்து பேசினேன். அப்போது மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது உட்பட பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு முதல்வர், திட்டவாரியாக செலவுத்தொகையை குறித்து தரும்படி கேட்டுள்ளார். அதை வைத்து நிதி அமைச்சருடன் ஆலோசித்து நிதி உதவி செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணி புரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்க உடனே நிதி உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.