Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டுப் பணிகள்; ஸ்டாலின் ஆய்வு

Print PDF

தினமலர் 10.06.2010

செம்மொழி மாநாட்டுப் பணிகள்; ஸ்டாலின் ஆய்வு

கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்காமல் ஓட்டலுக்குத் திரும்பினார்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்ய, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கோவை வந்தார். காளப்பட்டியில் தி.மு.., கட்சி விழாவில் பங்கேற்றார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். ..சி., பூங்கா மைதானத்தில் "இனியவை நாற்பது' என்ற பெயரில், 40 அலங்கார ஊர்திகள் தயாராகி வருகின்றன. இந்தப் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். தயாரான ஊர்திகள் குறித்து, போக்குவரத்து அமைச்சர் நேரு, கலை இயக்குனர்கள் ஓவியர் மருது, ஜே.பி. கிருஷ்ணா மற்றும் தோட்டா தரணி விளக்கினர். ஒவ்வொரு வாகனத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை விவரித்தனர். அட்சய பாத்திரத்துடன் மணிமேகலை, மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் ஆகிய சரித்திரப் பாத்திரங்கள், அந்த காட்சிக்கான பின்னணி குறித்து ஆர்வமாக ஸ்டாலின் கேட்டறிந்தார். அனைத்து ஊர்திகளையும் 15ம் தேதிக்குள் முடித்துத் தர வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு உத்தரவிட்டார். வரும் 15ம் தேதி மீண்டும் துணை முதல்வர் வருவதாகவும், 16ம் தேதி முதல்வர் கருணாநிதி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட பின், கோவை மாநகராட்சி 37 லட்சம் ரூபாய்க்கு புதிதாக வாங்கியுள்ள தூய்மைப் பணி இயந்திர வாகனத்தை, ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த வாகனத்தின் சிறப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா விளக்கினார். அதன்பின், பாலசுந்தரம் சாலை, பாரதியார் சாலை சந்திப்பு, சின்னச்சாமி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நடக்கும் சாலைப் பணிகளை ஸ்டாலின் ஆய்வு செய்தார். எஸ்.என்.ஆர்., திட்டச்சாலை அமைக்கும் பணி, கணபதி - விளாங்குறிச்சி சாலைப் பணி, விளாங்குறிச்சி - சத்தி சாலைப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். சாலைப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்குமாறு அவர் உத்தரவிட்டார். கோவை நகரில் 218 இடங்களில் தலா ஏழு லட்ச ரூபாய் செலவில் பயணிகள் நிழற் குடை அமைக்கப்படுகிறது. சத்தி சாலையில் சி.எம். எஸ்.பள்ளி அருகே அமைக்கப் பட்டுள்ள நிழற்குடையில் ஸ்டாலின் அமர்ந்து பார்த்தார். வெயில் மற்றும் மழை உள்ளே வருவதற்கு வாய்ப்பு அதிகமிருப்பதால், மேற்கூரையை நீட்டிக்குமாறு அறிவுறுத்தினார். இரு மாதங்களுக்கு முன்பாக ஸ்டாலின் வந்தபோதே, இதே அறிவுறுத்தலை வழங்கியும், இதுவரை எந்த நிழற்குடையிலும் மேற்கூரை அளவு மாற்றப்படவில்லை.

சாய்பாபா காலனியில் 62வது வார்டில், 20 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் பூங்காவை அவர் பார்வையிட்டார். அங்கு வந்த பெண்களிடம் பேசிய ஸ்டாலின், பூங்காவை இப்போது இருப்பதைப் போலவே சிறப் பாகப் பராமரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பேரூர் வரையிலும் சென்று, அந்த சாலையில் நடக்கும் பணியையும் ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த ஆய்வுக்குப் பின், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அதில் அவர் பங்கேற் காமல் ஓய்வெடுக்கச் சென் றார். தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், ஊரக தொழில் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கதர்த்துறை அமை ச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, மாநாட்டு சிறப்பு அலுவலர் அலாவுதீன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சந்தானம் ஆகியோரும் ஆய்வின்போது உடன் சென்றனர்.

அலுப்பா? அதிருப்தியா? செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து, ஆய்வுமேற்கொண்ட பின், பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக அனைத்துத் துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் கூறப்பட்டிருந்தது. இதற்காக, ஏராளமான அதிகாரிகளும் காத்திருந்தனர். ஆனால், கலெக்டர் அலுவலக வாசல் வரைக்கும் வந்த ஸ்டாலின் வாகனம், உள்ளே திரும்பாமல், ரெஸிடென்சி ஓட்டலை நோக்கிச் சென்றது. பல மைல் தூரம் பயணம் சென்றதால், அவர் ஓய்வு எடுக்கச் சென்று விட்டதாக அதிகாரிகள் கூறினர். பணிகள் முழுமையடையாததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இருக்கலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது. எது உண்மை என்பது துணை முதல்வருக்கே வெளிச்சம்.