Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ரூ.256 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்: அரைகுறைப் பணிகளால் அவதியுறும் பொதுமக்கள்

Print PDF

தினமணி 14.06.2010

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ரூ.256 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்: அரைகுறைப் பணிகளால் அவதியுறும் பொதுமக்கள்

மதுரை; மதுரை மாநகராட்சிப் பகுதியில் ரூ.256 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தில், ஆங்காங்கே விடப்பட்டுள்ள அரைகுறைப் பணிகளால் பொதுமக்கள் மிகுந்த அல்லலுக்கு ஆளாகியுள்ளனர்.

நகரமைப்புக்கு இன்றளவும் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குவது மதுரை மாநகர் எனக் கூறுவதுண்டு. ஆனால், பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த ஆர்வம் காட்டாத அதிகாரிகளால், பல ஆண்டுகளாகவே மதுரை மக்கள் மிகுந்த இடையூறைச் சந்தித்து வருகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.

இதற்கு பிரதான எடுத்துக்காட்டாக, மாநகர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதுரை நகரில் சிறிய அளவில் மழை பெய்தாலே பெரியார் பஸ் நிலையம், ரயில் நிலையம் முன்புறம், கோரிப்பாளையம் என நகரின் முக்கியப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை சீர்குலைத்துவிடும். மேலும் வெள்ளக் காலத்தில் நகரின் தாழ்வான பகுதிக்குள் மழைநீர் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதற்கு முக்கியக் காரணம், போதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படாததே.

இதற்குத் தீர்வு காண்பதற்காக மாநகராட்சிப் பகுதியில் சாலைகள் மற்றும் 11 பெரிய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் விரைந்து வடிந்து செல்வதற்காக 2008-ம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 256 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் கிருதுமால், அவனியாபுரம், சிந்தாமணி உள்ளிட்ட ஆகிய இடங்களில் சாலையோரங்களில் கால்வாய் அமைத்து மழைநீரைக் கடத்துவதற்காக திட்டமிடப்பட்டு, 72 வார்டுகளும் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பல வார்டுகளிலும் கால்வாய் அமைக்கும் பணிகள் ஏனோதானோ என்று நடைபெற்று அரைகுறையாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக, 64-வது வார்டில் கோவலன் நகர், இந்திரா நகர், டி.வி.எஸ். நகர், அழகப்பன் நகர், 28-வது வார்டில் நாவலன் நகர் (1 முதல் 5 தெருக்கள்), கண்ணதாசன் தெரு, ஜவஹர் மெயின் ரோடு... என 72 வார்டு பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு நீண்ட நாள்களாக கிடக்கின்றன.

சில பகுதிகளில் கால்வாயின் அடிப்பகுதியில் கம்பி கட்டிய நிலையிலும், சில பகுதிகளில் இருபுறம் சிமெண்ட் தடுப்புச் சுவர்கள் அமைத்தும் பணிகள் முழுமை பெறாமல் குப்பைக் கிடங்காக காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில் குழி தோண்டப்பட்ட மண், நடைபாதைகளை அடைத்து போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளில் இருந்து மக்கள் தெருவுக்கு வரமுடியாதபடி குழிகள் தோண்டிப் போட்டுள்ளனர். அத்தகைய வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு வசதியாக குழிகளில் மண்ணைப் போட்டு மூடி தாற்காலிகமாக நடைபாதையைப் பயன்படுத்தி வருவதும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற அரைகுறைப் பணிகளால் இத்திட்டத்துக்கான கோடிக்கணக்கான நிதி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: இத்திட்டத்துக்காக வீடுகள் முன் மற்றும் வாய்க்கால் அமையவுள்ள மற்றும் அமைந்துள்ள வழிகளில் சுமார் 40,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பல இடங்களில் குடிநீர்க் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இத்திட்டம் குறித்து மாமன்ற கவுன்சிலர் சுப்புராமன் (காங்கிரஸ்) கூறுகையில், இத்திட்டத்தில் மத்திய அரசின் நிதி வீணாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக அண்ணா நகர், கே.கே. நகர், எஸ்.எஸ். காலனி போன்ற பகுதிகள் எல்லாம் வளர்ச்சியடைந்தவையாக உள்ளன. இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாகத் தெரிவதில்லை. ஆனால், இப்பகுதிகளையும் இத்திட்டத்தில் சேர்த்து குழிகள் தோண்டப்பட்டு பணிகள் முடிவுறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் கணேசன் கூறுகையில், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது. பல இடங்களில் அந்த நிறுவனம் சார்பில் சப்-காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. நகரை பற்றி முழுமையாக அறியாத இவர்களால் தண்ணீர் போக்குத் தெரியாமலே பல இடங்களில் வாய்க்காலுக்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் இந்தக் கால்வாய்க்கள் குப்பைத் தொட்டிகளாகக் காட்சியளிக்கின்றன என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டம் 50 சதம் முடிவுற்றுள்ளது. விரைவில் அனைத்துப் பணிகளும் நிறைவுற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.