Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா; வடசென்னை வளர்ச்சி பெறும்: மேயர் பெருமிதம்

Print PDF

தினமலர் 16.06.2010

புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா; வடசென்னை வளர்ச்சி பெறும்: மேயர் பெருமிதம்

தங்க சாலை : தென்சென்னை, மத்திய சென்னையை விட போக்குவரத்து வசதியை எளிதாக்கும் வகையில், வடசென்னையில் புதிய மேம்பாலங்கள் அமையுமென மேயர் தெரிவித்தார்.சென்னை தங்க சாலையில் 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: வடசென்னையின் தங்க சாலை பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் வகையில், புதிய மேம்பாலம் கட்ட கடந்த 2007-2008ம் ஆண்டு துணை முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதன்படி மேம்பாலம் கட்டும் பணிக்காக சென்னை மாநகராட்சி நிலத் தில் குத்தகைக்கு இருந்த மரக்கடைகள், கடந்த சில மாதங்களுக்கு முன் சட்ட ரீதியாக அகற்றப்பட்டன.அதன் மூலம் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, இன்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது. 520 மீட்டர் நீளத்தில், 15 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப் பாதை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இப்புதிய பாலம் அமையும்.

இதனால், தங்க சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கும், துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கும் இப்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை, 18 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், மக்களின் போக்குவரத்து வசதிக்காக திட்டமிட்டதற்கு சில மாதங்கள் முன்பாக கட்டிக் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.வடசென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை சுரங்கப்பாதை விரைவில் திறக்கப்படும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாசர்பாடி மேம்பாலப் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பாலப்பணிகள் முடிந்து வடசென்னை போக்குவரத்து பிரச்னைகள் தீர்க்கப்படும்.அதன் மூலம் தென்சென்னை, மத்திய சென்னையை விட போக்குவரத்து வசதியில் வடசென்னை நல்ல வளர்ச்சி பெறும். இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.விழாவில் இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சட்டர்ஜி, வி.எல்.பாபு எம்.எல்..,துணை மேயர் சத்யபாமா, மாநகராட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.