Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தங்கசாலை சந்திப்பில் ரூ.23 கோடியில் மேம்பால பணி

Print PDF

தினகரன் 16.06.2010

தங்கசாலை சந்திப்பில் ரூ.23 கோடியில் மேம்பால பணி

சென்னை, ஜூன் 16: மாநகராட்சி சார்பில் தங்கசாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்த பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தங்க சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று 2007&2008ம் ஆண்டு மானியக்கோரிக்கையின் போது, பேரவையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார். இந்த பகுதியில் உள்ள மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ் தங்களுடைய நிலத்தை தர இயலாது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து மேம்பாலம் அமைக்க புதிய வரைபடம் தெரிவு செய்யப்பட்டது. அதன்படி, பழைய சிறைச்சாலை சாலையில் உள்ள பொதுப்பணி, காவல், மருத்துவத் துறைகளுக்கு சொந்தமான 16 மனை 368 சதுர அடி நிலம் மேம்பாலம் கட்டுவதற்காக பெறப்பட்டது.

இதற்கிடையே, மாநகராட்சி நிலத்தில் குத்தகைக்கு இருந்த 35 மரக்கடை வியாபாரிகளில் 7 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் மரக்கடைகள் அகற்றப்பட்டு ரூ.40 கோடி மதிப்புள்ள 22.5 மனை நிலம் மீட்கப்பட்டது.

இந்த மேம்பாலம் ரூ.23 கோடி செலவில் கட்ட, கடந்த ஜூலையில் அரசு அனுமதி பெறப்பட்டது. மேலும், காலதாமதத்தை தவிர்க்க புதிய வரைபடத்தின்படி வடிவமைப்பு, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டமைப்பு முறையில் மேம்பாலம் அமைப்பதற்கான தீர்மானம் கடந்த மாதம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4ம் தேதி ஒப்பந்ததாருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, இன்று பணி தொடங்கப்படுகிறது. 520 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படும் மேம்பாலம் இரு வழிப்பாதையாகும். 18 மாதத்தில் இந்த பணி முடிக்கப்பட்டு திறக்கப்படும். இதன்மூலம் தங்கசாலை, பேசின் பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியூர் செல்லும் கனரக வாகன போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் பெரிதும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு மேயர் பேசினார்.