Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பக்கிள் ஓடை சீரமைப்பு இரண்டாம் கட்ட பணி தீவிரம்

Print PDF

தினமலர் 17.06.2010

பக்கிள் ஓடை சீரமைப்பு இரண்டாம் கட்ட பணி தீவிரம்

தூத்துக்குடி : 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ள தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பக்கிள் ஓடை சீரமைப்பு பணியின் முதல் கட்ட பணிகள் திரேஸ்புரத்தில் இருந்து இரண்டாம் கேட் அழகேசபுரம் பாலம் வரை 1.85 கிலோ மீட்டர் தூரம் 6 கோடியே 85 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு துணை முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணிகள் அழகேசபுரம் பாலம் முதல் அண்ணாநகர் 6வது தெரு வரை 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. கால்வாயின் இருபுறமும் உள்பகுதி முழுவதும் சிமெண்ட் கான்கீரிட் தளம் போட்டு கழிவு நீர் சீராக எந்தவித தேக்கமும் இல்லாமல் செல்லும் வகையில் அமைக்கபடவுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பணிக்கான பூமி பூஜை கடந்த மாதம் 29ம் தேதி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது. இதற்கு அடுத்து இந்த மாதம் 4ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட பணிகள் நடக்கவுள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. மொத்தம் 150 ஆக்கிரமிப்புகள் வரையிலும் அகற்றப்பட்டது. வீடுகள், கடைகள், கோயில்கள், பெரிய கட்டடங்கள் போன்றவை இதில் அடங்கும். ஆக்ரமிப்பு அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதில் இருந்து பக்கிள் ஓடை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பிலிருந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஜேசிபி., மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாயில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதோடு, ஆழமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கழிவுகள் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் கான்கீரிட் தளம் போடும் பணி தற்போது நடந்து வருகிறது. இது தவிர ஓடையின் இருபுற சுவர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.