Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் லிப்ட் வசதியுடன் 6 நடைபாதை மேம்பாலம் டிசம்பருக்குள் முடிவடையும்

Print PDF

தினகரன் 17.06.2010

நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் லிப்ட் வசதியுடன் 6 நடைபாதை மேம்பாலம் டிசம்பருக்குள் முடிவடையும்

சென்னை, ஜூன் 17: நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் மின்தூக்கி வசதியுடன் கூடிய 6 நடைபாதை மேம்பாலம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள சில இடங்களில் சாலைகளை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் கன்பத் ஓட்டல் அருகே மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டது. பின்னர், மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலமாக மாற்றப்பட்டது.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 2010&2011ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 6 முக்கிய சாலைகளில் மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

அதன்படி ராஜாஜிசாலையில் கடற்கரை ரயில் நிலையம் அருகில், என்.எஸ்.சி. போஸ் சாலையில் பாரிமுனை பஸ் நிலையம் அருகில், வாலாஜா சாலையில் பெல்ஸ் சாலை சந்திப்பு மற்றும் காயிதே&மில்லத் சாலை சந்திப்பு, காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில், துர்காபாய் தேஷ்முக் சாலையில் சத்யா ஸ்டூடியோ அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

என்எஸ்சி போஸ் சாலை, பெல்ஸ் சாலை, காயிதே மில்லத் சாலை ஆகிய மூன்று இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்க ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் ஜூலை மாதம் இறுதியில் டெண்டர் கோரப்படும். பின்னர் ஆறு நடைமேம்பால பணிகளுக்கான டெண்டர், அதிகாரிகள் மற்றும் நிலைக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, குறைந்த (எல்&1) விலைக்கு டெண்டர் கோரப்பட்ட நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, "சென்னையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 6 மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட (டெண்டர்) பணிகள் துவங்கியுள்ளது. ஒவ்வொரு பாலமும் ரூ.1 கோடி செலவில் 5.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். ஒரே நேரத்தில் 15 பேர் மின்தூக்கியில் ஏறி, சாலையை கடக்க முடியும். இந்த பணிகள் ஆகஸ்டில் துவங்கி டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.