Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஆகஸ்ட் 5ல் ஸ்டாலின் திறக்கிறார்

Print PDF

தினகரன் 29.06.2010

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஆகஸ்ட் 5ல் ஸ்டாலின் திறக்கிறார்

தூத்துக்குடி, ஜூன் 29: தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிட திறப்பு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இது குறித்து கலெக்டர் பிரகாஷ் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பழைய பஸ் நிலையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.

புதிய கட்டிடத்தை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் ஆயிரத்து 250 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதிக்கடன், மானியக்கடனுதவி வழங்குகிறார்.

மேலும் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 7ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டத்தில் உள்ள 8ஆயிரத்து 683 பேருக்கு 11 ஆயிரத்து 800 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மின் மயானத்தை பொறுத்தவரை அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி சான்று கிடைத்ததும் உடனடியாக திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் பிரகாஷ், மகளிர் திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட ஜேசிபி மற்றும் ஹெவி கிரேன் ஆப்பரேட்டர் பயிற்சியை நிறைவு செய்த 50 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்சியில் டிஆர்ஓ. துரை. ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் பொறுப்பு வகிதாபாணு, சப்கலெக்டர்கள் லதா, இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.