Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் மாதம் பணிகள் முடியும் போக்குவரத்து நெரிசல் குறையும்

Print PDF

தினமலர் 21.07.2010

ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் மாதம் பணிகள் முடியும் போக்குவரத்து நெரிசல் குறையும்

சென்னை, ஜூலை 21: ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபரில் முடிக்கப்படவுள்ளது.

தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வடக்கு உஸ்மான் சாலை& மகாலிங்கபுரம் சாலை, உஸ்மான் சாலை&துரைசாமி சாலை, கோமதி நாராயண சாலை&திருமலை சாலை ஆகிய சாலை சந்திப்புகளில் மாநகராட்சி சார்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

இது தவிர, ரங்கராஜபுரத்தையும் வடக்கு தி.நகர் பகுதியையும் இணைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க ரங்கராஜபுரம் ரயில்வே சந்திப்பின் குறுக்கே மேம்பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி 2008 ஜூலையில் தொடங்கியது. இங்கு ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கட்டுமான பணிகளை ரயில்வே துறை ரூ.8 கோடியில் மேற்கொண்டுள்ளது. மற்ற பணிகளை மாநகராட்சி ரூ.15.75 கோடியில் நிறைவேற்றுகிறது.

இந்த மேம்பாலம் 962 மீட்டர் நீளம் கொண்டது. வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பில் தொடங்கும் பசுல்லா சாலையில் இருவழி போக்குவரத்துக்கு ஏற்ப 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் இருக்கும். ரங்கராஜபுரம் பகுதியில் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இடது பக்கமாக திரும்பி பசுல்லா சாலைக்கு வரும் மேம்பாலமும் 6.5 மீட்டர் அகலத்தில் இருக்கும். பசுல்லா சாலையில் இருந்து இடது பக்கமாக திரும்பி ரங்கராஜபுரத்திற்கு (சுப்பிரமணியன் நகர்) செல்வதற்காக அமைக்கப்படும் மேம்பாலத்தின் அகலம் 6.5மீட்டராக இருக்கும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி கூறுகையில், ‘ரங்கராஜபுரம் மேம்பாலம் ரூ.23.75 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதில் ரயில்வே பங்களிப்பு ரூ.8 கோடியாகும். தற்போது 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபருக்குள் பணிகள் முடிக்கப்படும். ரங்கராஜபுரம், மேற்குமாம் பலம், அசோக்நகர் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் இந்த மேம்பாலத்தின் மூலம் பயன் அடைவார்கள். இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் கோடம்பாக்கம் மேம்பாலம், தி.நகர் துரைசாமிசாலை வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் ஓரளவு வாகன நெரிசல் குறையும்என்றார்.