Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்க் கசிவு சரிசெய்யும் வாகனம் மாநகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமணி 28.07.2010

குடிநீர்க் கசிவு சரிசெய்யும் வாகனம் மாநகராட்சியில் அறிமுகம்

கோவை, ஜூலை 27: கோவை மாநகராட்சியில் குடிநீர்க் கசிவை சரிசெய்ய பிரத்யேக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பிரதான குடிநீர்க் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அதேபோல வார்டு பகுதிகளிலும் குடிநீர்க் கசிவு ஏற்படுவதால் குடிநீர் விரயமாகிறது. இதை சரிசெய்ய உடனடியாகச் செல்ல முடியாத நிலையும் உள்ளது.

எனவே குடிநீர்க் கசிவை சரிசெய்ய பிரத்யேக வாகனம் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மானியத்தொகையில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 14.53 லட்சம். மினி பஸ் போல தோற்றம் அளிக்கும் இந்த வாகனத்தில், குடிநீர்க் கசிவை சரிசெய்யும் அனைத்து உபகரணங்களும் இருக்கும்.

ஜெனரேட்டர், வயர்லெஸ், இணைய இணைப்புடன் கூடிய மடிகணினி (லேப்டாப்), மொபைல் ஆய்வுக்கூடம், குடிநீரின் தரத்தை ஆய்வு செய்யும் கருவிகளும் இருக்கும். குடிநீர்க் கட்டணத்தை கணக்கிட்டு உடனடியாக ரசீது கொடுக்கக்கூடிய வசதியும் உள்ளது. மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனத்தை மேயர் ஆர்.வெங்கடாசலம் கொடி அசைத்து துவக்கிவைத்தார் (படம்).

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த வாகனத்தைப் பயன்படுத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர் கதிர்வேல் மேற்பார்வையில் டேப் இன்ஸ்பெக்டர், ஒரு பிட்டர், 5 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்க் கசிவு தொடர்பான தகவல்கள் தெரிந்தால், 94892 06030 என்ற செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.