Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்

Print PDF

தினமணி 03.08.2010

கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்

மதுரை,ஆக. 2: மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடி செலவில் நகரும் படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது. அப்பகுதி போக்குவரத்தை சீராக்க மாநகராட்சி உதவியுடன் மாநகர் போலீஸôர் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

மதுரை மாநகரில் போக்குவரத்தைச் சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் மேற்கொண்டுவருகிறார். மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களையும் போலீஸôர் மேற்கொண்டுவருகின்றனர்.

பெரியார் பஸ்நிலையப் பகுதியில் கட்டபொம்மன் சிலையைச் சுற்றியிருந்த பெரிய ரவுண்டான அமைப்பை குறுகியதாக்கி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது நல்ல பலனை அளித்துள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்குச் செல்வோரும் கோரிப்பாளையத்தையே வழியாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

தினமும் சுமார் 1 லட்சம் வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியை கடந்துசெல்வதாகவும் போக்குவரத்துப் போலீஸôர் கூறுகின்றனர். தற்போது தத்தனேரி ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறுவதால், பாலம் ஸ்டேஷன் சாலையில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தத்தனேரி ரயில்வே மேம்பாலம் பணிமுடிந்து போக்குவரத்து தொடங்கினால், திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்சி, சிவகங்கை என பல பகுதிகளுக்கும், மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதிக்கும் செல்லவேண்டிய அனைத்துவகை வாகனங்களும் கோரிப்பாளையத்தைக் கடந்துசெல்ல நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகும் எனவும் போக்குவரத்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலை பின்புறம் தற்போது பாதசாரிகள் சிக்னலைக் கடக்கும் வழியில் சுமார் 25 அடி உயரத்தில் நடைமேம்பாலம் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்பாலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும் நிலையில் பாதசாரிகள் பாலத்தில் ஏறும் இடத்திலும், இறங்கும் இடத்திலும் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக கோரிப்பாளையத்தில் பாலம் அமையும் இடத்தில் மாநகராட்சி பொறியாளர்கள் பாலம் அமையும் பகுதியை அளவீடு செய்து இத் திட்டத்தை இறுதிசெய்துள்ளனர்.

நகரும் படிக்கட்டுடன் கோரிப்பாளையத்தில் 2 இடங்களில் நடைமேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து சிக்கல் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மருத்துவமனை சுரங்கப்பாதை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர சிகிச்சை வழியின் முன் அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதை தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், நோயாளிகள் சுரங்கப்பாதை படிக்கட்டில் ஏறி இறங்க முடியாமல் சாலையைக் கடந்துசெல்கின்றனர்.

ஆகவே மருத்துவமனை முன் உள்ள சுரங்க நடைபாதையிலும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தால் பொதுமக்கள் அதிகளவில் அவ்வழியைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

கோரிப்பாளையத்தில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம் அமைக்கும் போது சுரங்கப்பாதையிலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க மாநகராட்சி முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களது கோரிக்கையாகும்.