Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும்

Print PDF

தினகரன் 16.08.2010

காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும்

புதுடெல்லி, ஆக.16: காமன்வெல்த் கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிக்க வேண்டும்என்று ஆளுநர் தேஜேந்திர கன்னா உத்தரவிட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் 3 ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்டுமான பணிகள் ரூ.35,000 கோடி செலவில் நடந்து வருகின்றன.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு இன்னும் 49 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடியாமல் உள்ளன. ஜூலை மாதம் 15 ம் தேதிக்குள் முடிந்திருக்க வேண்டிய இந்த பணிகள் இந்த மாதம் 31 ம் தேதிக்குள் முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கான கட்டுமான பணிகளை ஆளுநர் தேஜேந்திர கன்னா நேற்று பார்வையிட்டார்.

யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகம், காமன்வெல்த் விளையாட்டு போட்டி கிராமம் மற்றும் வசந்த் கஞ்ச் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் போன்ற பணிகளை தேஜேந்திர கன்னா நேரில் சென்று பார்வையிட்டார்.

வசந்த் கஞ்ச் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் 2000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. டெல்லி பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்புக்கள் அனைத்தும் 3 நட்சத்திர ஓட்டல் அந்தஸ்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அமைப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புக்களில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக வரும் விளையாட்டுத்துறை தொழில் நுட்ப நிபுணர்களை தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர அக்ஷர்தாம் கோயில் அருகில் உருவாக்கப்பட்டு வரும் விளையாட்டு கிராமத்தில் 8,000 விளையாட்டு வீரர்களை தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் முழுவதையும் ஆளுநர் தேஜேந்திர கன்னா நேற்று சுற்றிப்பார்த்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்க இன்னும் 49 நாட்களே உள்ளன.அதற்கான கட்டுமான பணிகளை எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த மாத கடைசிக்குள் கட்டி முடிக்க வேண்டும்.ஆகவே கட்டுமான பணிகளை விரைவு படுத்த அந்தந்த துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில் சுணக்கம் காட்டக் கூடாது. இவ்வாறு தேஜேந்திர கன்னா கூறினார்.