Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழுதடைந்த பழைய பஸ் நிலைய விடுதி

Print PDF

தினமணி 24.08.2010

பழுதடைந்த பழைய பஸ் நிலைய விடுதி

சேலம், ஆக. 23: சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த விடுதி கட்டடங்களை மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.பழனிசாமி, திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு மேலே தங்கும் விடுதி உள்ளது. இதில், சுமார் 20 அறைகள் உள்ளன. இவை யாவும் பஸ் நிலையம் அமைக்கப்பட்டபோது கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இந்தக் கட்டடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் ஆபத்தான நிலையில் கட்டடம் இருப்பது குறித்தும், இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சேலம் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பேரில், ஆணையர் பழனிச்சாமி பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி கட்டடங்களை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி, தனியார் வசம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது, பழுதுபார்க்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் இங்குள்ள கட்டடங்கள் மழையில் ஊறி, மோசமான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாநகராட்சிப் பொறியாளர்கள் இதை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்கின்றனர்.

அதன் பேரிலேயே கட்டடத்தின் தரம் குறித்துக் கூற முடியும். இதை இடித்துவிட்டு கட்டுவதா, பழுதுபார்ப்பதா என்பது அதன் பிறகு முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 24 August 2010 09:56