Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி திட்டச்சாலை நிலம் கபளீகரம்! திட்டங்கள் கேள்விக்குறி

Print PDF

தினமலர் 27.08.2010

மாநகராட்சி திட்டச்சாலை நிலம் கபளீகரம்! திட்டங்கள் கேள்விக்குறி

கோவை மாநகராட்சியில் புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; அடுத்த ஆண்டில் இது நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது. புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது திட்டச் சாலைகள் அமைக்க, நகருக்குள் இடம் இருக்காது, என்ற நிலை உருவாகியுள்ளது. கோவை நகர முழுமைத் திட்டத்தில் குறிப்பிட் டுள்ள 125க்கும் அதிகமான உத்தேச திட்டச்சாலைகளில், 100க்கும் அதிகமான திட்டச்சாலைகளுக்கான இடங்கள் பெருமளவில் விற்கப்பட்டுள்ளன;

 மீதமிருக்கும் இடங்களும் கபளீகரம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. கடந்த 18 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே திட்டச்சாலைகள் அமைக் கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் திட்டச்சாலை அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து தடுத்து வருகின்றனர். "விரிவு அபிவிருத்தித் திட்டம் மற்றும் மனைப் பிரிவுகளில் பொதுஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்றி அமைக்கக் கூடாது' என்று சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தீர்ப்புகளில் பல முறை உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. இந்த தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நிற்கிறது. மாநகராட்சியின் மெத்தனத்தால், உத்தேச திட்டச்சாலைக்காக வரையறுக்கப்பட்ட இடங்களின் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடந்துள்ள ஊழல் பணத்தை வைத்தே, திட்டச்சாலை இடங்களை விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். ஆனால், கடந்த 1996ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு வந்த மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் "பணம் குவிப்பதில்' காட்டிய அக்கறையை திட்டச்சாலைகள் அமைப்பதில் காட்டாதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இருந்த எல்லா மாமன்ற மக்கள் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு இப்போதுள்ள சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றனர். அது மட்டுமின்றி, இதுவரை "சும்மா' கிடந்த நிலங்களையும் "பிளாட்' போட்டு விற்கும் வேலையிலும் இறங்கி விட்டனர். இதற்காக, திட்டச் சாலைகளை நில உபயோக மாற்றம் செய்யவும், அகலத்தை குறைக்கவும் அடுத்தடுத்து மாநகராட்சி மன்றத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன. கோவை ராமநாதபுரத்தில் 100 அடி திட்டச் சாலையை 60 அடியாக குறைக்க இந்த மன்றம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மசக்காளிபாளையத்தில் உள்ள 80 அடி திட்டச் சாலையை 60 அடியாக குறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதேபோல, இன்னும் பல திட்டச்சாலைகளுக்கான இடங்கள், சத்தமின்றி கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. பீளமேட்டில் வருங்கால வைப்பு நிதி குடியிருப்புக்கு நடுவே செல்லும் திட்டச்சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் அறிவுறுத்தி, மாதங்கள் பல கடந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

இந்த இடங்களை மாநகராட்சி எடுக்காததற்கு நிதிப்பற்றாக்குறை மட்டுமே காரணமில்லை; இந்த இடங்களுக்கு இன்றுள்ள சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என்பதும் முக்கிய காரணம். இதேபோல, பூங்காக்களுக்குள் கட்டடம் கட்டுவது, சாலை அமைப்பது என பல வழிகளிலும் நகர ஊரமைப்பு விதிகளையும், கோர்ட் உத்தரவுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மீறி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரது கூட்டணியில் மாயமாகி வரும் திட்டச்சாலைகள் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களால், கோவை நகரின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் திட்டச் சாலைகள், இணைப்புச் சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான இடங் கள் எல்லாம் தனியார் கைக்கு மாறி விடும் அபாயமிருக்கிறது. இவ்விஷயத்தில், தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

"நகராத' திட்ட அலுவலர்: கோவை மாநகராட்சி நகர திட்ட அலுவலராக 7 ஆண்டுகளாக மாற்றமின்றி பணியாற்றி வரும் சவுந்தரராஜன், இந்த திட்டச்சாலைகள் மற்றும் பொது ஒதுக் கீட்டு இடங்களை காப் பாற்ற எந்த வகையிலும் முயற்சி எடுக்கவில்லை. கோவையிலிருந்து மாறாமல் இருப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் மன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்ததில் இருந்தே, இவர் இங்கு தொடர்ந்து பணியாற்றுவதால் இரு தரப்பினரும் அடையும் பலன்கள் குறித்த கேள்விகள் எழுகின்றன.

- நமது நிருபர் -