Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ5.76 கோடியில் வணிக வளாகங்கள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

Print PDF

தினகரன் 14.09.2010

நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ5.76 கோடியில் வணிக வளாகங்கள் துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்தார்

பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் பகுதிகளில் ரூ5.76 கோடி செலவில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகங்களை துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, கடை ஒதுக்கீடுக்கான அடையாள அட்டையை வியாபாரிக்கு வழங்குகிறார். அருகில், மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் அன்பழகன். அடுத்த படம்: பாண்டிபஜார் வணிக வளாக கட்டிடம்.

சென்னை, செப் 14: நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகத்தை துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார். பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் ஆகிய 3 இடங்களில் ரூ5.76 கோடியில் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிகவளாகம் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா, பாண்டிபஜார் வணிக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் ரிப்பன் வெட்டி வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.

பாண்டிபஜாரில் ரூ4.3 கோடியில் 3 மாடிகளில் 644 கடைகள் கட்டப்பட்டன. 3 லிப்ட்கள், 36 கழிவறைகள், வாகனம் நிறுத்த இடவசதி ஆகியவை உள்ளன. அயனாவரத்தில் ஒரு கோடியே 19 லட்சத்தில் 332 கடைகள் கட்டப்பட்டன. ராயபுரம் எம்.சி.சாலையில், ரூ27 லட்சத்தில் 33 கடைகள் கட்டப்பட்டன. மொத்தம் 1,109 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

கடை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி துணை முதல்வர் மு..ஸடாலின் பேசியதாவது:

இந்த வணிக வளாகங்களை வணிகர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் 2 முறை சென்னை மேயராக இருந்தேன். இடையில் மேயர் பொறுப்பு தட்டி பறிக்கப்பட்டது. அதற்காக சட்டமும் கொண்டுவரப்பட்டது. இதை நீங்கள் அறிவீர்கள். என்னிடம் ஒரு நிருபர் உங்கள் சூளுரையின்படி சென்னையை சிங்கார சென்னையாக்க முடிந்ததா? என்று கேட்டார். அதற்கு நான், மேயர் பொறுப்பில் இருந்தபோது 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 80 முதல் 90 சதவீதம் வரை முடிந்துள்ளது என்றேன். பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பின் மூலம் தான் 100 சதவீதத்தை எட்ட முடியும்.

தேர்தல் அறிக்கையில் இல்லாத திட்டமான கலைஞர் காப்பீட்டு திட்டம் மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம். ஊரக பகுதிகளில் 22 லட்சம் குடிசை வீடுகளுக்கு மாற்றாக நிரந்தர கான்கிரீட் வீடுகளை கட்டி வருகிறோம்.

இந்தாண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 30 சதவீத பணிகள் முடிந்துள்ளன. ஜனவரி 31ம் தேதிக்குள் 3 லட்சம் வீடுகளும் திறந்து வைக்கப்படும். மீதமுள்ள 18 லட்சம் வீடுகளையும் கலைஞர் மீண்டும் முதல்வராகி திறந்துவைப்பார். அதில் சந்தேகம் வேண்டாம். இந்த திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இதை நாங்கள் நேரில் ஆய்வு செய்தபோது உணர்ந்தோம். வேண்டும் என்றே திட்டமிட்டு அரசியல் உள் நோக்கத்துடன் சில தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து 3 ஆயிரம் கோடி நிலத்தை மாநகராட்சி மீட்டு, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்துள்ளது. இது முடிவல்ல. இந்த பணி தொடரும். இன்னும் ஆயிரம் கோடி மதிப்புள்ள 600 கிரவுண்ட் நிலத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது. இது மாநகராட்சியின் சாதனையாகும். பொதுமக்களிடம் இருந்து எந்த வரியும் கூடுதலாக பெறாமல் இவ்வளவு திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு மு.. ஸ்டாலின் பேசினார்.

மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். டி.கே.எஸ்.இளங்கோவன், எக்ஸ்னோரா நிர்மல், கவுன்சிலர்கள் ராமலிங்கம், சைதைரவி, கே.ஏழுமலை பேசினர். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி வரவேற்றார். இணை ஆணையர் ஆசிஸ் சட்டர்ஜி நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர்கள் அன்பழகன். வி.எஸ்.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.