Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மகப்பேறு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள்

Print PDF

தினமணி 16.09.2010

மகப்பேறு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள்

மதுரை, செப்.15: மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திரவியம் தாயுமானவர் பிள்ளை மகப்பேறு மருத்துவ மையத்துக்கு எம்.எல்.. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 13 மகப்பேறு மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கர்ப்பிணிகளுக்கான ஸ்கேன் வசதி சில மையங்களில் மட்டுமே உள்ளன.

இந்நிலையில், கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட திரவியம் தாயுமானவர் பிள்ளை மகப்பேறு மருத்துவ மையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், செல் சென்டர், பயோ கெமிஸ்டிரி அனலைசர் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் ரூ 11 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் வளரும் குழந்தையின் தன்மை, வளர்ச்சி குறித்தும், செல் சென்டர் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் நிலைமை, ஹீமோகுளோபின் அளவு குறித்தும் அறியலாம். பயோ கெமிஸ்டிரி அனலைசர் மூலம் ரத்த அழுத்தம், யூரியா, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளலாம்.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துகொள்கின்றனர். இதில், 70 சதம் பேர் ஸ்கேன் எடுக்கின்றனர். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தனியார் மையத்தில் எடுத்தால் குறைந்தது ரூ500 வரை செலவாகும். ஆனால் மாநகராட்சியில் இலவசமாக எடுக்கப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பயன்பெறுவர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், எம்.எல்.. நன்மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11 லட்சத்துக்கான உபகரணங்கள் இந்த மையத்துக்கு வாங்கப்பட்டுள்ளன. நவீன உபகரணங்கள் வைப்பதற்காக சம்பந்தப்பட்ட அந்த மகப்பேறு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கமிஷனர் செபாஸ்டின் அறிவிப்பார் என்றார்.