Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகரில் 2008ல் முடிய வேண்டிய பாதாள சாக்கடை பணி எப்போது முடியும்?

Print PDF

தினமலர் 20.09.2010

விருதுநகரில் 2008ல் முடிய வேண்டிய பாதாள சாக்கடை பணி எப்போது முடியும்?

விருதுநகர் : செயல்படுத்தினால் பயன் இருக்காது என கூறப்பட்டும், "இலக்கு' நிர்ணயித்து விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி மூன்று ஆண்டுகளாகியும் முடிந்தபாடில்லை. கோடிகளை முழுங்கியுள்ள இத்திட்டம் இன்னும் சில கோடிகளை விழுங்க உள்ள நிலையில் சுமாராக இருந்த ரோடுகள் அலங்கோலப்படுத்தப்பட்டு வாகன போக்குவரத்தை இடியாப்ப சிக்கலாக மாற்றிவிட்டது தான் திட்டம் கண்ட பலனாக உள்ளது. விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் கலை கண்ட விருதுநகரில், வீடுகள் முன் வாறுகாலில் மனிதகழிவுகள் முதல் அனைத்து கழிவுகளும் மிதக்கும். இதனால் 20 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் இங்கு செயல்படுத்த ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் விருதுநகருக்கு சரிபட்டு வராது என முடிவு தெரிந்து திட்டம் கைவிடப்பட்டது.

நகராட்சி கவுன்சிலுக்கு 2006 தேர்தலில், "தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திட்டம் பயனளிக்கும்' என கூறினர். 2007 ஜனவரியில் 23.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் துவக்கப்பட்டது. 88.73 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிப்பு, 15,820 வீடுகளுக்கு குழாய் இணைப்பு என பிரமாண்டமாக கூறப்பட்ட இத்திட்டம் 2008 ஜூனில் முடிந்துவிடும், கழிவுகள் பூமிக்கு அடியில் ஓடி, குப்பை கிடங்கு அருகே அமைக்கப்படும் நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விருதுநகரை தாண்டி கடத்தி விடப்படும் என்றார்கள். 2010 ஜூனும் வந்து போய்விட்டது. திட்டம் தான் இன்னமும் முடிந்தபாடில்லை.பல இடங்களில் சுமாராக இருந்த ரோடுகள் கூட, பாதாளசாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி அதன் மீது மண், கற்களோடு சேர்த்து மூடியிருப்பதால் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

இந்நிலையில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் சுத்தம் செய்து ஊரை தாண்டி கழிவுநீர் கடத்திவிடப்படும் என நகராட்சியினர் கூறினர். ஆனால், அது அமைக்கப்படாமலேயே வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து 29 லட்சம் வரை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கவுசிகா நதியில் விடப்படுகிறது என நகர் நல அமைப்பினர் போட்ட புகார் குண்டு வெடிக்க துவங்கிவிட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது: திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. திட்டம் முடிந்த பின் தான் நகரில் ரோடு போடப்படும் என்றார்கள். ஆனால், நகராட்சி வி..பி., உள்ள அல்லம்பட்டி, அமைச்சர் வசிக்கும் பகுதியான ராமமூர்த்தி ரோட்டில் பளபளக்கும் ரோடு போடப்பட்டுள்ளது. நாங்கள் கொடுத்த புகாரால் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணியை மத்திய மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ய வர உள்ளனர். இதனால் நகரில் சில பகுதிகளில் ரோடு போடப்பட்டுள்ளது, என்றனர்.

இதுகுறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "நிதி மற்றும் வெளியிட இயலாத சில காரணங்களால் திட்டம் தாமதமாகி வருகிறது. இருப்பினும் விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்ட வரப்படும். விதிப்படி தான் பணிகள் செய்யப்படுகிறது,' என்றனர். ஆனால், இப்போதும் வீடுகள் முன் மனித கழிவுகள் உட்பட அனைத்து கழிவுகள் தேங்கிதான் உள்ளன.