Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

Print PDF

தினமணி 20.09.2010

நகராட்சி அலுவலக புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

தேனி, செப். 19: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ரூ 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகப் புதிய கட்டடம், திறப்புவிழா காணப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் உள்ளது.

பெரியகுளத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

நகராட்சி அலுவலகக் கட்டடத்தை ஒட்டிய பகுதியில் நகர்மன்றக் கூட்ட அரங்கு அமைந்துள்ளது. போதிய இடவசதி இல்லாத பழமையான நகராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மானித்து, ரூ 60 செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால், நகராட்சி அலுவலகம் தாற்காலிகமாக நகர்மன்றக் கூட்ட அரங்கில் செயல்பட்டது.

கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த நிலையில், நகராட்சி அலுவலக புதியக் கட்டடத்தை கடந்த பிப்ரவரி, 16-ம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்புவிழாவின்போது துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இந்நிலையில், திறப்புவிழா காணப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், இந்தப் புதியக் கட்டடம் தற்போது வரை பயன்பாட்டுக்குத் திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அலுவலகம் நகர்மன்றக் கூட்ட அரங்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக, நகர்மன்றக் கூட்ட அரங்கில் போதிய இடவசதி இல்லாத நிலையில், ஒரே இடத்தில் அனைத்துப் பிரிவுகளும் செயல்பட்டு வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் நேரங்களில் நகராட்சி அலுவலகம் செயல்பட முடிவதில்லை என்றும், நகர்மன்றக் கூட்டத்துக்காக அலுவலக ஆவணங்கள் மற்றும் இருக்கைகளை ஒதுக்கிவைப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர். நகராட்சி அலுவலகப் புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நகராட்சி அலுவலகக் கட்டடத்தில் பதிக்கப்படும் அடிக்கல்லில், அரசியல் கட்சியினரின் பெயர்களைப் பொறிப்பதில் நகர்மன்ற நிர்வாகப் பொறுப்பில் உள்ள அதிமுக, திமுக கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால், புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சீதாலட்சுமி கூறுகையில், புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்குத் திறப்பதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. பல ஆண்டுகளுக்கு பின்பு கட்டப்பட்ட புதிய கட்டடம் என்பதால் நாள், நேரம் பார்த்து பயன்பாட்டிற்குத் திறக்கலாம் என்று கருதுகிறோம். நகராட்சி அலுவலகக் கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றார்.