Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மணப்பாறையில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?

Print PDF

தினமணி 24.09.2010

மணப்பாறையில் சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?

மணப்பாறை, செப். 23: மணப்பாறை நகராட்சியால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை 27 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சிப் பகுதியாகவும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமாகவும் திகழ்கிறது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பொது விளையாட்டு மைதானமோ, சிறுவர் பூங்காவோ இல்லாதது பெரும் குறையாகவே உள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வெங்கிடுசாமி பூங்காவையும், நகராட்சி நிர்வாகம் உழவர் சந்தைக்கு தாரை வார்த்தது. தற்போது உழவர் சந்தையும் செயல்பாடின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.

இதற்கிடையே, கடந்த 2008-ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக, புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட அண்ணா நகரில் இரண்டு இடங்களிலும், மஸ்தான் தெரு, அண்ணாவி நகர், எடத்தெரு, சிவசக்திநகர் என ஆறு இடங்களிலும் நகராட்சி நிர்வாகம் இடத்தை தேர்வு செய்து, அங்கு | 22 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் சுற்றுச் சுவர் மற்றும் இரும்புக் கதவுகள் அமைக்கப்பட்டன. ஆனால், அப்பகுதியில் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. தற்போது அந்தப் பகுதியில் புல், பூண்டுகள் முளைத்தும், சில இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசும் பகுதிகளாகவும் மாறி விட்டன.

சிவசக்தி நகரில் 3740 .மீ. பரப்பளவுக்கு இடமும், அண்ணா நகரில் 1817 .மீ. பரப்பளவுக்கு இடமும் உள்ளன. அண்ணாநகரில் உள்ள இடத்தை தூய்மைப் படுத்தினால் அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய பூங்கா ஒன்றை அமைக்க முடியும்.

மீதமுள்ள இடங்களில் அந்தந்தப் பகுதி குழந்தைகள் களிப்புறும் வகையில் சிறுவர் பூங்காக்களை உருவாக்கலாம். இவற்றை ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், ஜூனியர் சேம்பர் உள்ளிட்ட அமைப்புகளிடம் ஒப்படைத்து, சிறப்பாக பராமரிக்கலாம்.

மேலும், மாலை நேர இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் வகையில், சில பூங்காக்களில் அரங்குகளை அமைத்து வாடகைக்கு விடலாம். இதன் மூலம் நகராட்சியின் வருவாய் பெருகுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் அருணாச்சலம் கூறியது:

நகரில் உள்ள 27 வார்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட தெருக்களில் 6 இடங்களை இனம் கண்டுள்ளோம். இந்த இடங்களில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பொது நிதியிலிருந்து பல பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது போதிய நிதி இல்லாததால், அடுத்தக் கட்ட பணிகளைச் செய்ய முடியவில்லை. தற்போது அந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்குரியப் பணிகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம் என்றார்.

எனவே, நகரில் உள்ள மக்கள் இளைப்பாறுவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பூங்காக்கள் அவசியம் தேவை. இவை அமைய உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பூங்கா அமைக்கும் பணிக்கு நிதியுதவி பெற்று பணிகளை தொடங்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பு.