Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பரில் திறப்பு: மேயர்

Print PDF

தினமணி 06.10.2010

பெரம்பூர் நவீன இறைச்சிக்கூடம் டிசம்பரில் திறப்பு: மேயர்

சென்னை, அக்.5: பெரம்பூரில் 48 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடம் வரும் டிசம்பரில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் நவீன இறைச்சிக்கூடத்தினை மேயர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த 2006-ம் ஆண்டில் நவீன இறைச்சிக்கூடத்திற்கான பணியினை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பணி ஆக்ரோ இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, 2009-ல் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள இறைச்சிக்கூடம் 1903-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பழமையான இறைச்சிக்கூடத்தை மாற்றியமைத்து, நவீன முறையில் 48 கோடியில் வடிவமைத்தல், கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (டி.பி..டி.) முறையில் கட்டப்படுகிறது.

9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்படும்.

நவீன தொழில்நுட்பத்துடன் பிராணிகளை இறைச்சிக்காக வெட்டுவதுடன், கழிவுகளை நவீன முறையில் சுத்திகரித்து, வெளியேற்றப்படும். அங்கு ஒரு மணி நேரத்துக்கு 250 ஆடுகள் வெட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.

இப்போது வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, ஒரு மணி நேரத்துக்கு 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாடுகள் வெட்டுவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இறைச்சியை விற்பதற்காக அங்குள்ள சுமார் 20, 30 சிறிய வியாபாரிகளுக்கு சிறிய வணிக வளாகக்கூடம் கட்டித் தரப்படும். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இப்போது வேலை செய்யும் தொழிலாளர்களே இதிலும் பணிபுரிவார்கள்.

இந்தப் புதிய கட்டடத்தில் ஆய்வகம், மழைநீர் வடிகால்வாய், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் மற்றும் அழகிய பூங்கா வசதிகளுடன் பெரம்பூர் இறைச்சிக்கூடம் வரும் டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன். வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டலக்குழு தலைவர் மா.கன்னியப்பன், தலைமை பொறியாளர் கே.விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 06 October 2010 10:56