Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டூ வீலருக்கு 2 அடுக்கு பார்க்கிங் இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு

Print PDF

தினகரன் 08.10.2010

கோயம்பேடு பஸ் நிலையத்தில் டூ வீலருக்கு 2 அடுக்கு பார்க்கிங் இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு

சென்னை, அக்.8: கோயம்பேடு பஸ் நிலையத்தில் ரூ17 கோடி செலவில் அமைக்கப்பட்ட இரண்டு அடுக்கு பாதாள பார்க்கிங் வசதி இந்த மாதம் திறக்கப்படுகிறது. இங்கு 2 ஆயிரம் பைக் நிறுத்தலாம்.

கோயம்பேடு பஸ் நிலைய இருந்துதான் மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகிலுள்ள திருப்பதி, காஞ்சிபுரம், புதுச்சேரி செல்லவும் இங்குதான் பஸ் பிடிக்க வேண்டும். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூ வீலர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்படுகின்றன.

டூ வீலர்களில் வருபவர்கள் ஸ்டாண்டில் நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர். திறந்த வெளியில் நிறுத்தினால் மழை, வெயிலில் பாதிப்படைகிறது. சில சமயம் திருடு போய் விடுகிறது. அருகிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருபவர்களும் டூவீலர் நிறுத்த இடமின்றி அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தரைக்கு கீழ் பாதாள பார்க்கிங் கட்ட அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு பாதாள பார்க்கிங் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. தரைக்கு கீழ் உள்ள இந்த பார்க்கிங்கில் இரண்டு அடுக்குகளுக்கும் இடையே 9 அடி இடைவெளி விடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

பார்க்கிங்கின் மேல் உள்ள தரை தளத்தில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. நடைபாதை, புல்தரை, நீரூற்று, இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் புதிய பார்க்கிங் திறக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 08 October 2010 07:35