Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை டிசம்பரில் திறக்க முடிவு

Print PDF

தினமலர் 12.10.2010

வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை டிசம்பரில் திறக்க முடிவு

சென்னை: ""வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப் பாதையை டிசம்பர் மாதம் முதல்வர் திறந்து வைப்பார்,'' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி லோகோ ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தையொட்டி ஒன்பது கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய பாலம் அமைக்கும் பணியும், வில்லிவாக்கம் ரயில்வே லெவல் கிராசிங்கில், 34 கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பில், சுரங்கப் பாதை கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: வட சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மணியக்கார சத்திர தெருவில், ரயில்வே சுரங்கப் பாதை, கத்திவாக்கம் நெடுஞ்சாலை - காக்ரேன் பேசின் சாலை சந்திப்பு ரயில்வே மேம்பாலம், தங்க சாலை சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் 508 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன், 6.3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு, மேல் தளம் சாய்வு சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணி அடுத்த மாதத்தில் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார். அது போல், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப் பாதை 447.50 மீட்டர் நீளத்திலும் 2.5 மீட்டர் அகலத்தில் சைக்கிள் பாதை உட்பட 13 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதையில் 85 சதவீத கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் முழுமையான கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார். இவ்வாறு மேயர் கூறினார். மேயருடன், புரசைவாக்கம், பாபு எம்.எல்.., துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமது, தலைமைப் பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் இருந்தனர்.