Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி நிறைவேற்றப்படுமா?

Print PDF

தினமணி 13.10.2010

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி நிறைவேற்றப்படுமா?

விருதுநகர், அக் 12: விருதுநகர் நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நகரில் திறந்த கால்வாயில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் 2005-ம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 23.25 கோடி மதிப்பில் நிறைவேற்ற நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்தப் புள்ளிகள் தாமதம் போன்ற காரணங்களால் திட்ட மதிப்பீடு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது 28.655 கோடியில் அதிகரிக்கப்பட்டு பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் முக்கிய குழாய்கள், பெரிய தொட்டிகள் அமைக்கும் பணிகள் மட்டும் மதுரை சாலையில் நடைபெற்றுள்ளன. மேலும் நகரில் இருந்து வெளியேறும் கழிவுநீóர் அனைத்தும் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு குளத்தில் கொண்டு விடப்படுகிறது.

அங்கு நவீன முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் நகர் சுத்தமாகும் என்ற நோக்கத்தோடு இந்தப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இப்பணிகளை அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினால் மட்டுமே இத்திட்டம் முழுமை பெறும் என்பது பொதுமக்கள் கருத்தாகும்.

நகரின் முக்கிய பகுதிகளான காசுக்கடை பஜார், மார்க்கெட், பழைய பஸ் நிலையப் பகுதி, நகராட்சி பகுதி உள்பட பல்வேறு பகுதியில் வேலைகள் தொடங்கப்படாமல் உள்ளன. முக்கிய தெருக்களும் விடுபட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்று வந்தபோதும் இன்னும் பணிகள் முடியவில்லை. பாதாள சாக்கடைத் திட்டத்தில் அனைத்துப் பகுதிகளும் திட்ட மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. தற்போது இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் வீட்டு இணைப்புகளும் வழங்கப்படவில்லை. முக்கிய இடங்களில் கழிவுநீரை தேக்கி வைத்து பம்பிங் செய்யும் இடத்திலும் வேலை நடைபெறவில்லை.

இது குறித்து கவுன்சிலர் ஜெயக்குமார் கூறுகையில், இந்தப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. எந்தப் பணிகளும் முழுமையாக முடியாத நிலை உள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதியில் பணிகள் முடிந்ததும் சாலைப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். அதற்கும் சேர்த்துத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.