Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டிமேட்டுப்பாளையம் சாலையில் 21 இடங்களில் புதிய மழைநீர் கால்வாய்

Print PDF

தினமலர் 14.10.2010

ஊட்டிமேட்டுப்பாளையம் சாலையில் 21 இடங்களில் புதிய மழைநீர் கால்வாய்

ஊட்டி : ""ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 21 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது,'' என நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையால் சாலையில் மந்தாடா மற்றும் எல்லநள்ளி பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை சீரமைத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் காணிக்கராஜ் நகர் பகுதியில் மீண்டும் இச்சாலை பழுதடைந்தது. தற்போது அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி இந்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்து மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 21 பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது; ஊட்டி-குன்னூர் சாலையில் மழை நீரால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு செய்துள்ளனர். இதில் மழையால் சேதம் ஏற்படும் என 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெள்ள நீர் சாலையில் ஓடாமல் இருக்க மழை நீர் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும். மேலும் பருவ மழை காலத்தில் ஊட்டி நகராட்சி மற்றும் கோத்தகிரி சாலையில் மண் அரிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டு, அப்பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் குறித்து தகவல் அளிக்க கட்டுபாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.