Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழைய பாலம், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் புதுப்பிப்பு மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 19.10.2010

பழைய பாலம், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் புதுப்பிப்பு மாநகராட்சி தீவிரம்

சென்னை, அக். 19: சேதமடைந்துள்ள பழைய பாலங்கள், சுரங்கப்பாதைகள் ரூ6 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டு கெங்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ117 கோடியே 58 லட்சம் செலவில் 6 மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ83 கோடியே 32 லட்சம் செலவில் 6 சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் பழைய பாலங்கள், சுரங்கப்பாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

காயிதே மில்லத் கல்லூரி அருகில் உள்ள பின்னி பாலம், தங்கசாலை பார்த்தசாரதி பாலம், கண்ணகி சிலை அருகே உள்ள சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, எழும்பூர் காந்தி இர்வின் சாலை பாலம், அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகியவை ரூ2 கோடியே 28 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. அடையாறு திருவிக பாலம், வைத்தியநாதன் பாலம் உள்பட பல்வேறு பணிகள் ரூ3 கோடியே 65 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு கெங்கு சாலையில் உள்ள சுரங்கப்பாதை பூந்தமல்லி சாலையையும், எழும்பூர் பகுதியையும் இணைக்கும் முக்கிய சுரங்கப் பாதையாகும்.

இங்கு சேதமடைந்த கைப்பிடி சுவர், சிமென்ட் கான்கிரீட் சாலை, நடைபாதை சீரமைக்கப்படுகிறது. சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் அழகிய சித்திரங்கள் தீட்டப்படுகிறது. ரூ21.22 லட்சம் செலவில் நடக்கும் இந்தப் பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார். மண்டல குழு தலைவர் அன்புதுரை, கவுன்சிலர் ருக்மாங்கதன், மண்டல அலுவலர் சம்பத், செயற்பொறியாளர் ராமு உடன் இருந்தனர்.