Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அரியலூர் பஸ் நிலையத்தில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அரியலூர் பஸ் நிலையத்தில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்

அரியலூர், அக். 19: அரியலூர் பேருந்து நிலையத்தில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்கு மத்திய அமைச்சர் ராசா அடிக்கல் நாட்டினார். அரியலூர் நகராட்சி சார்பில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம் 2009&10ன் கீழ் பேருந்து நிலையத்தில் உள்புற பகுதியில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் வரவேற்றார்.

எம்எல்ஏக்கள் பாளை.அமரமூர்த்தி, சிவசங்கர், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சிமென்ட் தளம் அமைக்கும் பணியை மத்திய அமைச்சர் ராசா துவக்கி வைத்தார். மேலும் 12 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.4000 மதிப்பில் 3 சக்கர சைக்கிள், ஒரு மாற்று திறனாளிக்கு காதொலி கருவி, உடையார்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகத்திற்கு இயற்கை மரணத்திற்கான நிதியுதவி ரூ.17,000 சேர்த்து ரூ.70,200 மதிப்பிலான நலஉதவி வழங்கினார். பின்னர் மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:

அரியலூர் நகராட்சியில் அடிப்படை உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் அரியலூர் பேருந்து நிலைய உட்புற பகுதியில் ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் மானியம் ரூ.70 லட்சம், நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் சேர்த்து ரூ.1 கோடியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. அரியலூர் நகரத்திற்கு ரூ.27.50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டமும் இன்று துவங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 38 கி.மீ. தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் அரியலூர் நகராட்சி வசிக்கும் 10,400 குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பயன்பெறுவர் என்றார்.

டிஆர்ஓ பிச்சை, துணைத்தலைவர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஜீவரத்தினம், தாசில்தார் கோவிந்தராஜீலு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் அமுதலட்சுமி, ராமமூர்த்தி, மணிவண்ணன், ராமு, சந்திரசேகரன், மாலா தமிழரசன், குணா, பழனிச்சாமி, சாவித்திரி பாஸ்கர், பாபு, நகராட்சி அலுவலர் குமரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் நன்றிகூறினார்.

முன்னதாக பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கட்சி கொடியை மத்திய அமைச்சர் ராசா ஏற்றி வைத்தார். மாநில இளைஞரணி துணை பொதுச்செயலாளர் சுபாசந்திரசேகர், நகர செயலாளர் முருகேசன், பேச்சாளர் பெருநெற்கிள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.