Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெட்ரோ ரெயில்-கிரீன்பீல்டு விமான நிலையம் திட்டங்களால் சென்னையை உலகத்தர நகரமாக மாற்ற நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் பேச்சு

Print PDF

மாலை மலர் 20.10.2010

மெட்ரோ ரெயில்-கிரீன்பீல்டு விமான நிலையம் திட்டங்களால் சென்னையை உலகத்தர நகரமாக மாற்ற நடவடிக்கை; மு..ஸ்டாலின் பேச்சு

மெட்ரோ ரெயில்-கிரீன்பீல்டு விமான நிலையம் திட்டங்களால் சென்னையை உலகத்தர நகரமாக மாற்ற நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக்.20- சென்னையை உலகத்தர நகரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் `சென்னை-2020' என்ற கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் கலந்து கொண்டு `சென்னை-2020'க்கான சி.டி.யை வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

85 லட்சம் மக்கள் தொகையுடன் இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக சென்னை விளங்குகிறது. ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தியின் பெரிய மையமாகவும், மென்பொருள் உற்பத்தியில் முன்னணி மையமாகவும் சென்னை திகழ்கிறது. சுகாதாரம் மற்றும் கல்வி வசதியிலும் மிகமுக்கிய இடமாக விளங்குகிறது.

மும்பை, டெல்லி போன்ற மற்ற பெரிய நகரங்களைவிட சென்னை இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது என்று அமெரிக்க பத்திரிகையான `போர்ப்ஸ்' குறிப்பிட்டுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை இந்தியாவின் இரண்டாவது பெரிய பொழுதுபோக்கு மையமாகவும் இருந்து வருகிறது.

தமிழக அரசு சென்னையை உலகத்தர நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 45 கிலோ மீட்டர் நீள முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில், சமீபத்தில் அரசு வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிக்க முடிவுசெய்துள்ளது. இதில் 9 ரெயில் நிலையங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 2015ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூடுதலாக 11 மேம்பாலங்களை கட்டி வருகிறது. வேகமாகவும், சுலபமாகவும் பயணிக்கும் வகையில் உள்வட்ட பறக்கும் சாலை அமைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு அரசு மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மெரினா கடற்கரையும், பல நகர பூங்காக்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடையார் கழிமுகம் `அடையார் சுற்றுச்சூழல் பூங்கா'வாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அந்த பகுதியை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா மேம்பாலம் அருகே 22 ஏக்கர் பரப்பில் விதம்விதமான தாவரங்களை கொண்டு உலகத்தரத்திலான தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் தற்போதைய குடிநீர் தேவை தினமும் 650 முதல் 700 மில்லியன் லிட்டர் ஆகும். குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் சென்னை நகருக்கு தேவைப்படும் 15 டி.எம்.சி. குடிநீருக்கான நீராதாரங்களை தமிழகத்தில் கண்டறிய ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

2020ல் சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை 2.76 கோடியாகவும், விமான சரக்கு போக்குவரத்து 10.4 லட்சம் டன்னாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமான நிலைய ஆணையம், உள்நாட்டு முனையம், சரக்கு வளாகம் ஆகியவற்றை கட்டவும், சர்வதேச முனையத்தையும், இரண்டாவது ஓடுபாதையையும் விரிவாக்கம் செய்யவும், அடுக்குமாடி கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி வான்வெளி போக்குவரத்து பூங்கா (ஏரோ பார்க்) அமைக்கவும், 2020க்குள் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் நிதி நகரம், விளையாட்டு நகரம், ஊடக நகரம் ஆகியவற்றை அமைக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சிகள் வரவேற்கப்படும் அதேசமயம் பல பிரச்சினைகளும் உருவாகிறது. ஆனாலும் உலகத்தரத்திலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு உருவாக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு மு..ஸ்டாலின் பேசினார்.

விழாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் எல்.மான்சிங் பேசும்போது, ``குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் காக்கிநாடா - சென்னை 2012ம் ஆண்டும், சென்னை - தூத்துக்குடி 2012ம் ஆண்டும், சென்னை - பெங்களூர் - மங்களூர் 2013ம் ஆண்டும், கொச்சி - பெங்களூர் - மங்களூர் 2012ம் ஆண்டும் முடிவடையும். இந்த 4 குழாய் திட்டங்களும் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும். தமிழகத்தில் சென்னை உள்பட 25 நகரங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோக மையங்களும் அமைக்கப்படவுள்ளது'' என்றார்.

முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர் நந்தினி ரங்கசாமி வரவேற்றார். தென்பிராந்திய துணை தலைவர் டி.டி.அசோக், சென்னை மண்டல தலைவர் அபயகுமார், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள். சிட்டிபாபு நன்றி கூறினார்.