Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.16,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை பாதுகாக்க சிறப்பு குழு

Print PDF

தினகரன்                 29.10.2010

ரூ.16,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை பாதுகாக்க சிறப்பு குழு

புதுடெல்லி, அக். 29: காமன்வெல்த் போட்டியின்போது, ரூ.16,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் ஷீலா தீட்சித் நியமித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியின்போது ரூ.16,000 கோடி செலவில் புதிய மைதானங்கள், சாலைகள், நடைபாதைகள், மேம்பாலங்கள், புல்வெளிகள், ஏற்கனவே இருக்கும் மைதானங்கள் புதுப்பிப்பு, தெரு விளக்குகள் என்று பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்த உள்கட்டமைப்புகளை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், பொதுப்பணித்துறை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

ரூ.16,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும். மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தலைமையில் இக்குழு செயல்படும்.

காமன்வெல்த் போட்டியின்போது, புதிய உள்கட்டமைப்புகளை பாதுகாக்க எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்பட்டதோ, அதே அளவுக்கு தொடர்ந்து இவற்றை பாதுகாப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய அரசு துறைகளின் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நகரை சுத்தமாக வைத்திருக்கு உள்ளாட்சி அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதேபோல் மைதானங்கள், தெரு விளக்குகள், குறியீடுகள், பஸ் நிறுத்த நிழற்குடைகள், புல்வெளிகள், மேம்பாலங்கள், நடைமேம் பாலங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நகரின் அழகு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

இதேபோல் உள்கட்டமைப்புகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி பணிகளை கண்காணிக்க வேண்டும்.

பாதாள ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளின் சுத்தப் பணியை மெட்ரோ ரயில் நிறுவனமும், போலீசாரும் மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் செயல்படாத சிக்னல் விளக்குகள், பயன்படாத இரும்பு தடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.