Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுமுகையில் ரூ1.25 கோடியில் மின்மயானம் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினகரன்                 01.11.2010

சிறுமுகையில் ரூ1.25 கோடியில் மின்மயானம் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

மேட்டுப்பாளையம், நவ.1: சிறுமுகை பேரூராட்சியில் அமைய உள்ள ரூ.1.25 கோடி மதிப்பிலான மின்மயான கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் மத்திய அமைச்சர் பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் 725 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிறுமுகை பேரூராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிய மின்மயானம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மார்கள் பேறு காலத்திற்கு பின் சிகிச்சை பெறுவதற்கான கட்டிட திறப்பு விழா, நெசவாளர் சங்கங்கள் சார்பில் நெசவாளர்களுக்கு ரூ.54 லட்சம் மதிப்பில் கைத்தறி உபகரணங்கள் வழங்கும் விழா, நல திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் சிறுமுகையில் நடந்தது. விழாவிற்கு கோவை கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார். சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார் வரவேற்றார். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மத்திய அமைச்சர் ராசா பங்கேற்று வெள்ளிகுப்பம் பாளையம் சக்தி விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடம், ஆலாங்கொம்பில் கூட்டுறவு சங்க சமுதாய கூடம், சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது :இப்பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் மின் மயானம் அமைப்பது பாராட்டுக்கு உரியது. நாட்டில் வேறு எந்த அரசும் செய்யாத வளர்ச்சி பணிகளை முதல்வர் கலைஞர் செய்து வருகிறார்.

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு தொடர கலைஞர் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, மேட்டுப்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார், சிறுமுகை பகுதி கைத்தறி குழும தலைவர் ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தன், குன்னூர் எம்.எல்.ஏ சவுந்திர பாண்டியன், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் நாச்சிமுத்து, கைத்தறி ஆலோசனை குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவ சண்முகம், தாசில்தார் மணிமேகலை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டர். முடிவில் கோவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் ராஜகோபால் நன்றி கூறினார்.

கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த 7 வயது மணிலா, 8வயது தீனா, 1 வயது கார்த்தி ஆகியோர் மலர் கொத்துக்களை மத்திய அமைச்சர் ராசாவுக்கு வழங்கி நன்றியை தெரிவித்து கொண்டனர்.