Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம்: 76.04 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி             01.11.2010

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டம்: 76.04 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில், அக்.31:நாகர்கோவில் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த 76.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்துக்கு 76.04 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய கடந்த 16.9.2010-ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 27.9.2010-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான 7-வது ஒப்பளிப்பு கமிட்டிக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கான நிதி விடுவிப்பு செய்ய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசு 80 சதவிகிதம் நிதியாக 52.45 கோடியும், மாநில அரசு 10 சதவிகிதம் நிதியாக 6.55 கோடியும், நகராட்சி 10 சதவிகிதம் நிதியாக 6.55 கோடியும் என்று மொத்தம் 65.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகையை நகராட்சியே செலவிட வேண்டும். இது தொடர்பாக நகர்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் உறுப்பினர்களின் விவாதங்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் கூறியதாவது:

பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு மத்திய அரசு 80 சதவிகிதமும், மாநில அரசு 10 சதவிகிதமும் மானியமாக வழங்குகின்றன. நகரில் 21 வார்டுகளில் முழுமையாகவும், 19 வார்டுகளில் பகுதியாகவும் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வலம்புரிவிளை நகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ள இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டியுள்ளது என்றார் அசோகன் சாலமன்.