Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சைதாப்பேட்டையில் கட்டப்படுகிறது ரூ4 கோடியில் 100 படுக்கையுடன் மாநகராட்சி நவீன மருத்துவமனை ஜனவரியில் திறப்பு

Print PDF

தினகரன்                  02.11.2010

சைதாப்பேட்டையில் கட்டப்படுகிறது ரூ4 கோடியில் 100 படுக்கையுடன் மாநகராட்சி நவீன மருத்துவமனை ஜனவரியில் திறப்பு

சென்னை, நவ. 2: சைதாப்பேட்டையில் ரூ4 கோடியில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி மருத்துவமனை ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று மேயர் கூறினார்.

சென்னை மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் நவீன மருத்துவமனை கட்டிட பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் 2006ம் ஆண்டு சைதாப்பேட்டை, பெருமாள்பேட்டை ஆகிய 2 மாநகராட்சி மருத்துவமனைகளில் மட்டுமே 24 மணி நேர மகப்பேறு சேவை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மண்டலங்களிலும் 24 மணி நேர மகப்பேறு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் அடையாறு, கோடம்பாக்கம் மண்டலங்களில் புதிதாக மகப்பேறு மருத்துவமனைகள் திறக்கப்படும்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் மகப்பேறு மருத்துவமனை அருகில், மாநகராட்சி சார்பில் தரைத்தளத்துடன் 3 மாடிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

இது 1,995 சதுடி அடி கொண்டது. புதிய மருத்துவமனையில் ஆலோசனை கூடம், பரிசோதனை கூடம், ஆய்வுக்கூடம், கலந்தாய்வுக்கூடம், மருந்தகம், காத்திருக்கும் அறை, அறுவை சிகிச்சை அரங்கு போன்ற பல்வேறு வசதிகளும் இருக்கும்.

இந்த மருத்துவமனையின் பின்புறம் தரைத்தளத்துடன் 3 மாடி கட்டிடம் 21,587 சதுர அடியில் இணைப்பு கட்டிடம் கட்டப்படுகிறது. இதில் பொதுப்பிரிவு, சிகிச்சை அறை, மருத்துவர்கள் அறை என பல்வேறு நவீன வசதிகள் இருக்கும். மொத்தம் 32,582 சதுர அடியில் ரூ4 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்த பிரமாண்டமான மாநகராட்சி மருத்துவமனை வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். ஆய்வின்போது மண்டல குழு தலைவர் தனசேகரன், கவுன்சிலர் மகேஷ்குமார் உடன் இருந்தனர்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் உருவாகும் நவீன மருத்துவமனை கட்டிடப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், மண்டல குழு தலைவர் க.தனசேகரன், கவுன்சிலர் மகேஷ்குமார்.