Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலும் 3 இடங்களிலும் அமைக்க முடிவு ரிப்பன் மாளிகை & அமைந்தகரை 5 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம்

Print PDF

தினகரன்              10.09.2010

மேலும் 3 இடங்களிலும் அமைக்க முடிவு ரிப்பன் மாளிகை & அமைந்தகரை 5 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம்

சென்னை, நவ. 10: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிப்பன் மாளிகை முதல் அமைந்தகரை மார்க்கெட் வரை 5 கி.மீ. தூரத்துக்கு புதிய மேம்பாலம் மற்றும் வேளச்சேரி விஜயநகரம், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை, கொளத்தூர் இரட்டை ஏரி பகுதி ஆகிய இடங்களிலும் புதிய மேம்பாலங்களை ரூ465 கோடியில் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கோயம்பேடு, கிண்டி, பாடியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாசாலை, வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கூடுதலாக 4 இடங்களில் ரூ465 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சித் துறைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட உள்ள 4 மேம்பாலங்கள் விவரம் வருமாறு:

* பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து புதிய மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட உள்ள இந்த பாலம் ரூ65

கோடியில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

* வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலைகள் இணையும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கு ரூ50 கோடியில் திட்ட அறிக்கை அளிக்க நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடம் ஆகும். இந்த புதிய மேம்பாலம் அமைந்தால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

* கொளத்தூர் அருகில் இரட்டை ஏரி பகுதியில் பெரம்பூர்& செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ50 கோடியில் மேம்பாலம்.

* பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் ராஜாமுத்தையா சாலை சந்திப்பு முதல் அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை உள்ள சாலை சந்திப்புகளை இணைத்து மிக நீளமான மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ300 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மேம்பாலம் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள சிக்னலில் இருந்து எழும்பூர், கீழ்ப்பாக்கம் இடையில் உள்ள சிக்னல்களை கடந்து அமைந்தகரை மார்க்கெட் சிக்னல் வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட உள்ள மிக நீளமான மேம்பாலமாகும்.

4 புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, திட்ட மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் மிகாமல் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் பொறுப்பில் உள்ள சுழற்சி நிதியினை பயன்படுத்திடவும், ஆலோசகர் மூலம் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.