Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வருமா?

Print PDF

தினகரன்                   15.11.2010

செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வருமா?

செங்கல்பட்டு, நவ. 15: செங்கல்பட்டு நகராட்சியில் 33வது வார்டுகள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திறந்தவெளி கால்வாய் மூலம் அருகில் உள்ள 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொளவாய் ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால், கொளவாய் ஏரி நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக, 4 ஆண்டுக்கு முன்பு ரூ27 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கியது. நகராட்சி சார்பில் முதற்கட்டமாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ16 லட்சம் வழங்கப்பட்டது. திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், நகரமன்றம் சரிவர செயல்படவில்லை. ஒரு வருடங்களுக்கு மேலாக நகரமன்ற கூட்டமே நடக்கவில்லை. எவ்வித தீர் மானமும் நிறைவேற்றப்படுவதில்லை.

இதனால், பணிகள் தொடங்காததால், குடிநீர் வடிகால் வாரியம் ரூ16 லட்சத்தை செங்கல்பட்டு நகராட்சிக்கே திருப்பி கொடுத்தது. மேலும், பாதாள சாக்கடை திட்டத்துக்காக, செங்கல்பட்டு நகராட்சிக்கு ஒதுக்கிய நிதியை அரசு வேறு நகராட்சிக்கு மாற்றியது. இதன் காரணமாக, அரசு நிதி ஒதுக்கியும் பாதாள சாக்கடை திட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு வராமல் போனது.

இதற்கிடையே, செங்கல்பட்டு அருகே பில்லேரிமேடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியது. இங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த திட்டமும் வீணானது. திறந்தவெளி கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம் வீசுகிறது. பன்றி, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், நகராட்சியில் கடுமையான குடிநீர் பிரச்னையும் நிலவுகிறது. 5 நாளுக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கொளவாய் ஏரி நீரை குடிநீராக பயன்படுத்தலாம். ஆனால் அதில் கழிவுநீர் கலப்பதால் அந்த வழியும் இல்லாமல் உள்ளது. இதற்கு ஒரே தீர்வு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைப்பது தான். இதன் மூலம் கொளவாய் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். குடிநீர் பிரச்னையையும் தீர்க்க முடியும். எனவே, செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.