Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடைத் திட்டம்: 2012-ல் நிறைவடையும்: ஆட்சியர்

Print PDF

தினமணி              19.11.2010

பாதாள சாக்கடைத் திட்டம்: 2012-ல் நிறைவடையும்: ஆட்சியர்

ஈரோடு, நவ. 18: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வரும் 2012-ல் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து, ரூ.209.22 கோடி மதிப்பில் பாதள சாக்கடை அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐந்து பகுதிகளாக நடைபெறும் இக்கட்டுமானப் பணிகளில், தற்போது பிரிவு 1 மற்றும் பிரிவு 3 பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணிக்கம்பாளையம், பெரியார் நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை கட்டுமானப் பணியை, மல்லிகை நகர் நீரேற்று நிலையப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும், ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் காந்திஜி சாலை மகப்பேறு மருத்துவமனை, ரூ.3 கோடி மதிப்பில் நடைபெறும் மாநகராட்சி அலுவலக கட்டுமானப் பணிகளையும் அவர் புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், 5 பிரிவுகளாக நடைபெறுகின்றன. தற்போது 1 மற்றும் 3 ஆகிய பிரிவுகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 3 பிரிவு பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.

ஆனால் 1-வது பிரிவு பணி, சரிவர நடைபெறவில்லை. எனவே, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற 3 பிரிவுகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 2012 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. காந்திஜி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவது தொடர்பாக, அரசிடம் ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரப் சாலையில் 80 அடி சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அரசு ஆலோசனை பெற்று, அதன்படி செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மாநகராட்சிப் பொறியாளர் வடிவேல், பாதாள சாக்கடை திட்டப் பொறியாளர் ஞானமணி, செயற் பொறியாளர்கள் முருகானந்தம், சுகந்தி உடனிருந்தனர்.