Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனைத்து வசதிகளுடன் வேலூர் பாலாற்றங்கரையில் ரூ1 கோடியில் நவீன எரிமேடை

Print PDF

தினகரன்                22.11.2010

அனைத்து வசதிகளுடன் வேலூர் பாலாற்றங்கரையில் ரூ1 கோடியில் நவீன எரிமேடை

வேலூர்,நவ.22: வேலூர் பாலாற்றங்கரையில் தியான மண்டபம் உட்பட அனைத்து வசதிகளுடன் ரூ1 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிமேடை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வேலூர் பாலாற்றங்கரையில் மாநகராட்சிக்கு சொந்தமான மயான தகனமேடை இருந்து வந்தது. விறகுகளால் எரியூட்டும்போது ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை போக்கும் வகையில், நவீன எரிமேடை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி மாநில அரசு மற்றும் மாநகராட்சி சேர்ந்து ரூ46 லட்சம் செலவில் நவீன எரிமேடை அமைப்பதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அனைத்து பணிகளும் 6 மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் காண்டிராக்டர் பணிகளை விட்டு சென்றதால் கட்டிட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து பல கட்டங்களாக கூடுதல் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுசுவருடன் கூடிய நவீன எரிமேடை, தியான மேடை ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு அறை, குளியலறை மற்றும் கழிவறை, சிற்பங்களுடன் கூடிய முன்மண்டபம் என இப்போது சுமார் ரூ1 கோடி மதிப்புள்ள கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எரிமேடையின் முன்பு நீரூற்றுடன் கூடிய அழகிய பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. நவீன எரிமேடையில் விறகு கட்டைகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் காஸ் பயன்படுத்தி எரியூட்டப்பட உள்ளது.

இதற்கான காஸ் பர்னர் மற்றும் மோட்டார் ஆகியவையும் வந்து விட்டது. அவற்றை பொருத்தி சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. இந்த மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் நவீன எரிமேடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.