Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் கட்ட மண் ஆய்வு

Print PDF

தினகரன்               23.11.2010

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் கட்ட மண் ஆய்வு

கோவை, நவ.23: கோவை காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வரை புதிதாக மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில், 4 வழிப்பாதையாக இந்த மேம்பாலம் அமையும்.

1.6 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான டெண்டர் விடப்பட்டது. மேம்பால தாங்கு தூண் அமைக்கப்படும் இடத்தில் தற்போது மண் ஆய்வு பணி நடக்கிறது. சில நாளில் இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட இடத்தில், ஆழ்துளையிட்டு, 100 அடி ஆழம் வரை மண் எடுத்து கட்டுமான துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மண்ணின் தன்மைக்கு ஏற்ப தாங்கு தூண் அமைக்கப்படும். இதுவரை நடந்த ஆய்வில், சில இடங்களில் களிமண், கரிசல் மண், செம்மண் என பல்வேறு வகையான மண் கிடைத்துள்ளது. தொழில்நுட்ப குழுவினரும், இந்த மண்ணின் தன்மை குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். அதற்கு பிறகே, மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்படும்.

மேம்பாலம் கட்ட முதல் கட்டமாக தாங்கு தூண்கள் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிட்டு சர்வே நடத்தியது. காந்திபுரம் சத்தி ரோட்டின் ஒரு புறம், அதாவது காவலர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள அதிக இடங்கள் மேம்பால பணிக்காக கையகப்படுத்தப்படும்.

மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரோட்டை ஒட்டியுள்ள சில வணிக வளாக கடைகள், மின் கம்பங்கள் அகற்றப்படவுள்ளது. டவுன்பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு கிளம்புள்ளது.

ஆனால், கோயிலை இடிப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மேம்பால பணிக்காக, இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். வரும் ஜனவரி மாதம் பணி துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியை துவக்கியதும், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, வடகோவை மேம்பாலம் செல்ல மாற்று பாதை ஒதுக்கப்படும். பஸ் ஸ்டாண்ட்டிற்குள் பஸ்கள் வந்து செல்லும் முறையில் மாற்றம் இருக்கும்.

கோவை காந்திபுரம் பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.