Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பக்கிள் ஓடை 3ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ.4 கோடி அனுமதி

Print PDF

தினமலர்                23.11.2010

பக்கிள் ஓடை 3ம் கட்ட பணிக்கு தமிழக அரசு ரூ.4 கோடி அனுமதி

தூத்துக்குடி : பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணிக்கு தமிழக அரசு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான் முன்னிலையில் நடந்தது. மாநகராட்சி இன்ஜி., ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, ஜுனியர் இன்ஜி.,கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். துரைமணி அஜென்டா வாசித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள் ஓடையில் முதல் கட்டமாக 1.82 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாட்டு பணிகள் 6 கோடியே 98 லட்சத்திற்கு செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 2.42 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏழரை கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட பணிகளான சிமெண்ட் தளம் மற்றும் சிறு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் பணிகளை முடிக்கும் வகையில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பக்கிள் ஓடை மூன்றாம் கட்ட பணி 2.06 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு 8 கோடியே 30 லட்சத்திற்கு மாநகராட்சியில் இருந்து அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டது. இதில் மூன்றாம் கட்ட பணிக்கு 1.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்போது 4 கோடி ரூபாய் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 4 கோடியே 30 லட்சத்திற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

4 கோடி அரசு மானியம் நீங்கலாக மீதியுள்ள 30 லட்ச ரூபாயை மாநகராட்சி பொதுநிதியில் இருந்து செலவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரநகர் மெயின்ரோடு, வி.வி.டி மெயின் ரோட்டில் ரோட்டை அகலப்படுத்தி சாலையை மேம்பாடு செய்ய ஒரு கோடியே 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயிற்கு அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குறிப்பாக சண்முகபுரம் பகுதிக்கு 6 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது என்றும், சில இடங்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் அதிமுக கவுன்சிலர்கள் சரவணன், ஈஸ்வரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதற்கு திமுக கொறடா கனகராஜ், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுரேஷ், ராமகிருஷ்ணன், ஆனந்தராஜ், இசக்கிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானத்தை வாசியுங்கள், அதிமுக உறுப்பினர் உட்கார வேண்டும் என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்த மேயர், வல்லநாடு தருவைகுளத்தில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால்தான் குடிநீர் வரத்து நின்றது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சென்று அதனை சரி செய்தனர். நானும் அங்கு சென்று பணிகளை பார்வையிட்டேன். மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இதெல்லாம் தெரியும். இதனால் குடிநீர் வருவது தாமதம் ஏற்பட்டது. எல்லா விபரமும் தெரிந்து கொண்டே அதிமுக கவுன்சிலர்கள் இதுபோன்று கேள்வி கேட்க கூடாது. தற்போது குழாய் உடைப்பு சீர் செய்யப்பட்டு குடிநீர் சப்ளை சீராகியுள்ளது என்றார். டூவிபுரம் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கொசுக்கள் அதிகமாக உள்ளது என்று அதிமுக கவுன்சிலர் ஜெயபாரதி கூறினார். கொசு மருந்து அடிக்கவும், தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேயர் கூறினார். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மில்லர்புரம் மெயின் ரோடு உள்ளிட்ட ரோடுகள் சீரமைப்பு செய்யப்படவில்லை. தங்கள் வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி 51வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.