Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடைத் திட்டம்; பாதுகாக்கப்பட்ட குடிநீர்...!

Print PDF

தினமலர்            30.12.2010

பாதாள சாக்கடைத் திட்டம்; பாதுகாக்கப்பட்ட குடிநீர்...!

திருநின்றவூர் : "பாதுகாக்கப்பட்ட குடிநீர், தரமான சாலைகள், கழிவுநீர் வெளியேற்ற பாதாள சாக்கடைத் திட்டம் வேண்டும்' என அடுக்கடுக்கான கோரிக்கைகளை கூறுகின்றனர் திருநின்றவூர் பொதுமக்கள்.சென்னை மாநகருக்கு அருகாமையில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருநின்றவூர். இங்கிருந்து சென்னை, பூந்தமல்லி, பெரியபாளையம், திருவள்ளூர் ஆகிய சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வசதி வாய்ப்பை பெற்றுள்ளது.சென்னை-திருவள்ளூர் இடையே வளர்ந்து வரும் நகரில் பிரதானமாக திகழும் திருநின்றவூரில், நிலத்தின் மதிப்பும் "ஜெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. ரயில் நிலையம், பஸ் நிலையம் அருகருகே அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.

பேரூராட்சி அந்தஸ்து கொண்ட திருநின்றவூரில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 45 ஆயிரம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் தலைவராக உள்ளார். கடந்த இரண்டாண்டுகளாக செயல் அலுவலர் இல்லாமல், "இன்சார்ஜ்' மூலம் நிர்வாகம் செயல்படுகிறது.வளர்ந்து வரும் நகராக திகழ்ந்தாலும், அடிப்படை வசதிகளைப் பொறுத்தவரையில் இன்னும் குக்கிராமமாகவே உள்ளது. மொத்தம் உள்ள 18 வார்டுகளிலும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஆங்காங்கே குளம் போல் தேங்கியுள்ளன. குப்பைகள் மலை போல் தேங்கிக் கிடக்கின்றன.

மக்களின் நீண்ட கால கோரிக்கை பாதாள சாக்கடைத் திட்டம். தெருக்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை சுகாதாரமான முறையில் வெளியேற்ற இத்திட்டத்தை எதிர்பார்க்கின்றனர். அதேபோல் பாதுகாக்கப்பட்ட குடிநீரும் இவர்களது கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று."தற்போது தாமரைப்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் நிரப்பி, அதன் பின்னர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் மூன்று நாளுக்கு ஒரு முறை தான். குடிநீர் குழாய் "சம்ப்'களில் சிலர் குளித்து, துணிகளை துவைத்தும், அசுத்தப்படுத்தி வருகின்றனர்.திருநின்றவூர் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன; மேலும் பல கட்டப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு தேவையான கழிவுநீர் தொட்டிகள் அமைக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை, தெருக்களில் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. கழிவு நீர் அகற்ற பேரூராட்சியில் பணம் கட்டினாலும், லாரி பழுது என்கின்றனர். இதனால், தனியார் லாரிகளில் கூடுதல் பணம் செலவழித்து எடுக்க வேண்டியுள்ளது' என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.திருநின்றவூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக மாற்றும் திட்டம் பிரகாஷ் நகரில், கடந்த நான்காண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. காலப்போக்கில் இத்திட்டம் செயல்படவில்லை. தற்போது பேரூராட்சி மட்டுமல்லாமல் ஓட்டல்கள், தனியார்கள் சிலரும் கழிவுநீர், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர். இதனால் சுற்றுப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

திருநின்றவூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க துணை தலைவர் மோகன்ராம் கூறியதாவது:இங்குள்ள மூன்று சுடுகாடுகளிலும் இணைப்பு சாலை, தண்ணீர் வசதி போன்றவை இல்லை. தகனமேடை இல்லாமல் மழைக் காலத்தில் அவதிப்படவேண்டியுள்ளது.இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ் வசதி இருந்தாலும், பஸ் நிலையம் இல்லை. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தான் நிறுத்தி வைக்கப்படுகிறது. ரயில் நிலையம் எதிரே, நெடுஞ்சாலையில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்திக் கொள்கின்றனர். கடைகளுக்கு வருபவர்களும் சாலையோரம் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை திட்டமிட்டபடி 200 அடி சாலையாக மாற்றாததால், சாலை குறுகிவிட்டது. இதனால், தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள தனியார் இரும்பு குடோன் அருகில் கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதாலும், காலை, மாலையில் "டிராபிக் ஜாம்' ஏற்படுகிறது. மின்வெட்டு, "லோ வோல்டேஜ்' பிரச்னையால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்து விடுகின்றன. மேலும், கடந்த இரண்டாண்டுகளாக இங்கு செயல் அலுவலர் இல்லை. இதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு மோகன்ராம் கூறினார்.இதுகுறித்து, பேரூராட்சி தலைவர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, "பாதாள சாக்கடைத் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் லாரி ஒன்று செயல்பாட்டில் உள்ளது. மற்றொன்று பழுதாகி உள்ளது. மேலும், கழிவுநீரை கொட்டுவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை. இதனால் தனியாரை பயன்படுத்த வேண்டியுள்ளது. வருவாய் குறைவாக உள்ளதால் பல திட்டங்களை செயல்படுத்த அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது' என்றார்.