Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ216 கோடியில் முதல்கட்ட பணி மாநகரில் பாதாள மின் கேபிள் திட்டம்

Print PDF

தினகரன்                  14.12.2010

ரூ216 கோடியில் முதல்கட்ட பணி மாநகரில் பாதாள மின் கேபிள் திட்டம்

ஈரோடு, டிச. 14: துணை மின்நிலையத்தில் இருந்து கேபிள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் மின்சாரம் முழுமை யாக சென்றடையவும், மின் இழப்பை தடுக்கவும், தடையில்லாத மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும் பாதாள மின் கேபிள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகளிலும் பாதாள மின்கேபிள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து சென்னை, கோவை மாநகராட்சிகளில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள மின்கேபிள் பதிக்கும் பணி செய்து முடிக்கப்பட்டு விட்டது.

தற்சமயம் சேலம் மாநகராட்சியில் தரைக்கு அடியில் மின்கேபிள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோன்று ஈரோடு மாநகராட்சியிலும் பாதாள மின் கேபிள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்து அதற்கான திட்ட மதிப்பீட்டை தயா ரித்து வழங்கும் படி கூறியிருந்தது. அதன்படி, தற்போது ஆர்ஏபிடிஆர்பி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக ரூ216 கோடி செலவில் பாதாள மின் கேபிள் அமைக்கும் பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமைப்பொறியாளர் சங்கர் கூறியதாவது: மின் இழப்பை தடுக்கும் வகையில் மாநகராட்சிகளில் தரையில் கேபிள் பதிக்கும் திட்டமான பாதாள மின் கேபிள்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சியில் இப்பணி தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போதைய ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், காசிபாளையம் மூன்றாம் நிலை நகராட்சிகளில் ஆர்ஏபிடிஆர்பி எனப்படும் மின் இழப்பை சரி செய்வதற்கான திட்டத்தின் கீழ் பாதாள மின் கேபிள் அமைக்க எவ்வளவு செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒருங்கிணைந்த மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 135 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மின் அழுத்த கேபிள்கள் பதிக்கவும், 630 கிலோ மீட்டருக்கு தாழ் மின் அழுத்த கேபிள்கள் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ. 216 கோடி செலவாகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. அரசிடம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் முறைப்படி பணி துவங்கும். நீண்ட கால திட்டமான இத்திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகும். இவ்வாறு தலைமை பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

தலைமை பொறியாளர் தகவல் இன்று முதல் மின் சிக்கன வாரம்

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சங்கர் கூறியதாவது: ஆண்டுதோறும் டிசம்பர் 14ம் தேதி (இன்று) மின் சிக்கன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று முதல் 20ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

ஈரோடு மின் மண்டலம் சார்பில் நடைபெற உள்ள மின் சிக்கன வாரத்தில் வரும் 16ம் தேதி காலையில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். அதேநாள் மாலையில் கிளப்மெலாஞ்ச் ஓட்டலில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெறும். இதேபோன்று கோபி, நாமக்கல் ஆகிய இடங்களிலும் மின் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி நடக்கும், என்று தெரிவித்தார்.