Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருளைத் தடுக்க சேம்பருடன் கூடிய தொட்டி ஜன. 1க்குள் கட்ட உத்தரவு

Print PDF

தினமணி               14.12.2010

பாதாளச் சாக்கடைக்குள் திடப்பொருளைத் தடுக்க சேம்பருடன் கூடிய தொட்டி ஜன. 1க்குள் கட்ட உத்தரவு

திருப்பூர், டிச. 13: பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுத்தும் வகையில் திடப்பொருட்கள் செல்வதைத் தடுக்க, ஜன. 1ம் தேதிக்குள் சேம்பருடன் கூடிய தொட்டியை அனைத்து நிறுவனங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை பராமரிப்பு குறித்து ஹோட்டல், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கு விழிப்புணர்வுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மேயர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி பேசியது:

விஷவாயுக்கள் நிறைந்த பாதாளச் சாக்கடை, செப்டிக் டேங்க் உள்ளிட்டவற்றில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யவும், சுத்தம் செய்யவும் மனிதர்களை இறக்கக் கூடாது என்றும், தகுந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மட்டுமே சீர்செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், திருப்பூரிலுள்ள ஹோட்டல், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது தகுந்த இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்வது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அதையும் மீறி மனிதர்களைப் பயன்படுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், திடப்பொருட்கள் அதிக அளவில் கலப்பதாலேயே பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடையில் அடைப்புகள் ஏற்படு வதைத் தடுக்க, உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், துணிகள், உதிந்த முடி உள்ளிட்ட திடப்பொருட்களை சாக்கடையில் போடக் கூடாது.

அவ்வாறு போடப்படும் திடப்பொருட்கள் பாதாளச் சாக்கடைக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் சாக்கடைக் கழிவுநீர் குழாயின் இடையே தொட்டியுடன் சேம்பர்கள் அமைக்க வேண்டும். அந்த சேம்பர்கள் மூலம் சாக்கடையில் செல்லும் திடக்கழிவுகள் தடுக்கப்பட்டு தொட்டிக்குள் விழும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இம்முறையை வரும் ஜன. 1ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்கள், வீடுகளிலும் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படாத பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதன்படி, சேம்பர்களுடன் கூடிய தொட்டி அமைப்பது குறித்து மாதிரி வரைபடமும் காட்டப்பட்டது. செயற்பொறியாளர் திருமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் முத்து, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.