Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருகம்பாக்கம்&அரும்பாக்கம் பகுதியில் ரூ. 147 கோடியில் மழைநீர் கால்வாய் பணி

Print PDF

தினகரன்        23.12.2010

விருகம்பாக்கம்&அரும்பாக்கம் பகுதியில் ரூ. 147 கோடியில் மழைநீர் கால்வாய் பணி

சென்னை, டிச. 23:

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் ரூ. 147 கோடியில் புதிய கால்வாய் மற்றும் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

முதல்வர் கருணாநிதி 2006ல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை சென்னை மாநகரில் 171 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு 47 சதவீதம் அதிகமாக மழை பெய்தபோதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் விருகம்பாக்கம், அரும்பாக்கம், சாலிகிராமம் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

இதை தடுக்க மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி இணைந்து ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1447.91 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைப்பு, பழுதடைந்த வடிகால்வாய்களை சீரமைப்பது என திட்டமிடப்பட்டது.

சென்னையில் கொளத்தூர் நீர்பிடிப்பு பகுதி, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம்&நந்தனம் நீர்பிடிப்பு பகுதி, கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதி என 10 இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளில் 50 கி.மீ. நீளம் மழைநீர் வடிகால்வாய்கள் புதிதாக கட்டுவதற்கு ரூ. 63.19 கோடியும், 13 கி.மீ. நீளத்திற்கு பிரதான கால்வாய் கட்ட ரூ. 19.48 கோடியும், 27 கி.மீ. நீளத்திற்கு ரூ. 29.41 கோடியில் உள்ளூட்டு கால்வாயும், 9 கி.மீ. நீளத்துக்கு சீரமைப்பு பணியும் துவங்கப்பட்டு உள்ளது.

விருகம்பாக்கம் & அரும்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் ரூ. 147 கோடி செலவிலான பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.

இத்திட்டம் மூலம் விருகம்பாக்கம், சின்மயாநகர், சாய்நகர், நடேசன் நகர், சாலிகிராமம், காந்திநகர், குமரன்காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்காது. இவ்வாறு மேயர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை ஆணையர் (பணிகள்) தரேஷ்அகமது, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் தனசேகரன், மன்ற உறுப்பினர்கள் முத்துவேல், வெல்டிங்மணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேயர் தொடங்கி வைத்தார்.