Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருங்குடியில் ரூ.22 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர்            31.12.2010

பெருங்குடியில் ரூ.22 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கம்

பெருங்குடி : பெருங்குடி பேரூராட்சியில் 22 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கியுள்ளன. இரண்டு ஆண்டிற்குள் இப்பணிகள் முடிக்கப்படவுள்ளன. சென்னை நகரை ஒட்டிய பெருங்குடி பேரூராட்சியில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. அங்கு 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. மேம்பால ரயில் திட்டம் வந்த பிறகு அங்கு குடியிருப்புகள் அதிகரித்தன. அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பு சலுகை மூலம் செயல்படுத்தப்பட்டன. பெருங்குடி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பேரூராட்சிகளின் கமிஷனர், காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரால் பரிந்துரை செய்யப்பட்டு, பெருங்குடி பேரூராட்சியில் 22 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, டில்லியில் நகர்புற வளர்ச்சித்துறை செயலர் தலைமையில் கூட்டம் நடந்தது. பின், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பெருங்குடியில் திட்டப் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இது குறித்து, பெருங்குடி பேரூராட்சி தலைவர் கந்தன் கூறுகையில்,"பெருங்குடி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முதல்கட்டமாக சி.பி.., காலனி, ராமப்பா நகர் மற்றும் திருமலை நகர் ஆகிய இடங்களில் துவக்கப்பட்டுள்ளன. பெருங்குடி, கந்தன்சாவடி, சீவரம் என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கவுள்ளன. திட்டத்திற்கான செலவில், மத்திய அரசு 35 சதவீதமும் மாநில அரசு 15 சதவீதமும் பேரூராட்சியின் பங்கு 50 சதவீதமும் இருக்கும். பணிக்காலம் 24 மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2012ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். இப்பணிகளால் நகர்களில் சாலை தோண்டப்படும். இருப்பினும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.