Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பகுதியில் மார்க்கெட், மயானம், பூங்கா 28ல் திறப்பு : நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

Print PDF

தினகரன்       24.01.2011

மாநகராட்சி பகுதியில் மார்க்கெட், மயானம், பூங்கா 28ல் திறப்பு : நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

கோவை, ஜன.24:

மீன்மார்க்கெட், மயானம், பூங்கா, ஆடுவதை கூடம், மண்டல அலுவலகம் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கோவை மாநகராட்சியில் புதிய கட்டடங்கள் பணி முடிந்தும் நீண்ட காலமாக திறக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், கட்டடங்களை திறக்க காலம் கடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைதொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டிய கட்டடங்களை வரும் 28ம் தேதி திறக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது.

கோவை மாநகராட்சி பூமார்க்கெட் அருகே பழமையான அண்ணா பூங்கா செயல்படுகிறது. 40 ஆண்டு கடந்து செயல்படும் இந்த பூங்காவிற்கு ஒரு காலத்தில் 10 பைசா தான் கட்டணம். இதற்கு பத்து பைசா பூங்கா என்ற பெயரும் உண்டு. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 25 லட்ச ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. நீரூற்று, நடைபாதை, புல்வெலி, மலர் செடி என புதுப்பொலிவுடன் பூங்கா திறப்பு விழாவிற்கு தயாராகி விட்டது.

நஞ்சுண்டாபுரத்தில், 2 ஆண்டு காலமாக நடந்த எரிவாயு மயான பணி முடிவுக்கு வந்துள்ளது. இது கோவை மாநகராட்சியின் முதல் எரிவாயு மயானம். 1 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த மயானத்தில் 10 நிமிடத்தில் ஒரு பிணத்தை எரித்து சாம்பல் வழங்க முடியும். ஒரு நாளில் 30 பிணங்களை எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிணம் காத்திருப்பு பிரச்னைக்கு எரிவாயு மயானம் தீர்வாக அமையும். மின் மயானத்தை காட்டிலும் எரிவாயு மயானம் 30 மடங்கு பயனுள்ளது. தனியார் மூலம் இந்த மயானத்தை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில், 1.37 கோடி ரூபாய் செலவில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. 66 கடைகளுடன் கூடிய இந்த மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக்கீடு, ஏலம் விவகாரத்தில் பிரச்னை நீடிக்கிறது. பல ஆண்டுகளாக வியாபார கடை நடத்துபவர்கள், ஏலம் இன்றி முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மின் ஏல முறையை மாநகராட்சி நிர்வாகம் கடை பிடிப்பதால் முடிவு ஏற்படவில்லை. பல்வேறு எதிர்ப்புக்கு இடையே இந்த மீன் மார்க்கெட்டும் திறக்கப்படவுள்ளது.

உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 97 லட்ச ரூபாய் செலவில் ஆடுவதை கூடம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடந்தது. பணி முடிந்த போது சுற்று சுவர் அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதைதொடர்ந்து சுவர் அமைக்கும் பணியும் முடிவுற்றது. புருக்பாண்ட் ரோட்டில் சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை வளாகம், 50 லட்ச ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. கோவையில் தெற்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி 4 ஆண்டு முடிந்த பின் மண்டல அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “தெற்கு மண்டல அலுவலகம், எரிவாயு மயானம், மருத்துவமனை கட்டடம், ஆடுவதை கூடம், மீன் மார்க்கெட் போன்றவை வரும் 28ம் தேதி திறக்கப்படும். தெற்கு மண்டல அலுவலகம் கட்டியதில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே தான் திறப்பு நடத்த முடியாத நிலையிருந்தது. வரும் 28ம் தேதி கட்டடம் திறக்கப்படும். பணி உத்தரவு பெறாமல் ஒப்பந்ததாரர் கட்டுமான பணி துவக்கியுள்ளார். ஒப்பந்த நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அளவு பில் தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலக விவகாரத்தில் அதிகாரிகள் சிலர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.