Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு : வடிகால் வாய்க்கால் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்                                          25.07.2012

விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு : வடிகால் வாய்க்கால் பணிகள் தீவிரம்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க 1 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக் கும் திட்டப் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதிய பஸ் நிலையம் கலைஞர் நகர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் என்.எஸ்.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கும் வகையில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, விழுப்புரம் நகராட்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு 7 லட்சத்து 10 ஆயிரமும், எருமனந்தாங்கலுக்கு 4 லட்சத்து 50 ஆயிரமும், காகுப்பத்திற்கு 8 லட்சத்து 50 ஆயிரமும், பானாம்பட்டு திருநகருக்கு 6 லட்சமும், பானாம்பட்டு காலனிக்கு 5 லட்சத்து 90 ஆயிரமும், சாலாமேடு சிதம்பரநாதர் தெருவிற்கு 6 லட்சமும், சாலாமேடு என்.எஸ்.கே., நகருக்கு 9 லட்சமும், புதிய பஸ் நிலையம் கலைஞர் நகர் முதல் சாலாமேடு ஏரி வரையில் 39 லட்சத்து 70 ஆயிரமும் பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதேபோல் வழுதரெட்டி கணேஷ் நகருக்கு 5 லட்சமும், வழுதரெட்டி காமராஜர் நகருக்கு 5 லட்சத்து 60 ஆயிரமும், பூந்தமல்லி தெரு மற்றும் ரஹிம் லே அவுட் பகுதிக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் என நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரத்தில் இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, அதன் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் மூலம் வடிநீர் வாய்க்கால் அமைப்படுகிறது. இந்த வடிநீர் வாய்க்காலில் மழை தண்ணீர் மட்டும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி பகுதிகளில் வடிநீர் வாய்க்கால் அமைக்கும் இடங்களிலிருந்து அனைத்து பகுதிகளில் தேங்கும் நீரை வாய்க்கால் மூலமாக மருதூர் ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம்போல் நிற்பது தவிர்க்கப்படும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் வடிகால் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.