Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுகையில் ரூ.35 கோடி பணிக்கு டெண்டர்

Print PDF

தினமலர்       26.07.2012   

புதுகையில் ரூ.35 கோடி பணிக்கு டெண்டர்

புதுக்கோட்டை: சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள ரூ.35 கோடி செலவிலான பணிகளுக்கு டெண்டர் நடந்ததால் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது.

புதுக்கோட்டை நகராட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர்ப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவம், உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார். புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் துவங்குவதில் சற்று காலதாமதமானது.இந்நிலையில் ரூ.35 கோடி மதிப்பிலான பணிகளுக்கு நேற்று டெண்டர் நடந்தது. தார் சாலைகளுக்கு ரூ.16 கோடி, சிமின்ட் சாலைகளுக்கு ரூ.9 கோடி என சாலைப் பணிகளுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவிடப்படுகிறது.நகரின் முக்கிய வீதிகளில் புதிதாக வடிகால்கள் அமைத்தல், சிதிலமடைந்துள்ள வடிகால்களை சீரமைத்தல், நவீன கழிப்பறை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இதற்கான டெண்டர் 25ம் தேதி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.சிறப்புத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் என்பதால் இவற்றை டெண்டர் எடுப்பதில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இதை சமாளிக்கவும், கமிஷன் தொகை நிர்ணயிக்கவும் காண்ட்ராக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அனைத்து பணிகளுக்கும் சரிசமமாக 12 சதவீத கமிஷன் நிர்ணயிக்கப்பட்டதால் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.இதையடுத்து நேற்றுமுன்தினம்(24ம் தேதி) இரவு புதுக்கோட்டை எஸ்.பி., அலுவலகம் எதிரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை தங்கும் விடுதியில் நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் கமிஷன் குறித்த நிபந்தனை சற்று தளர்த்தப்பட்டது.

தார் சாலை பணிகளுக்கு 12, சிமின்ட் சாலை பணிகளுக்கு 10, புதிய கட்டிடப் பணிகளுக்கு 5, வடிகால் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு 10 சதவீதம் என கமிஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

பணிகளை டெண்டர் எடுக்க விரும்பும் காண்ட்ராக்டர்கள் கமிஷன் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை காண்ட்ராக்டர்கள் ஏற்றுக்கொண்டதால் உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து திட்டமிட்டபடி நகராட்சி அலுவலகத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு நேற்று டெண்டர் நடந்தது. இதற்காக நகராட்சி அலுவலக ஆணையர் அறையின் அருகில் காலை 10 முதல் மாலை 3 மணி வரை டெண்டர் பெட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.இதற்கிடையே எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் ஆத்திரம் அடைந்துள்ள காண்ட்ராக்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டை விட குறைத்து(லெஸ்) டெண்டர் கோரப் போவதாக வதந்தி பரவியது.இவ்வாறு டெண்டர் கோரினால் நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் கிடைக்காது என்பதை உணர்ந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டியை முறியடிப்பதற்காக ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

டெண்டர் எடுப்பதில் மோதல்கள் ஏற்பட்டதால் அதை சமாளிப்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டனர். டெண்டர் நடப்பதை வேடிக்கை பார்க்க பார்வையாளர்களும் குவிந்ததால் நகராட்சி அலுவலக வளாகம் நேற்று காலை முதல் மாலை வரை திக்குமுக்காடியது.